நியூயார்க்:ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த ஆடவர்களுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் (T20 World Cup 2024) ஜூன் 2ஆம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 8வது போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா அணி, அயர்லாந்து அனியை எதிர்கொள்கின்றது.
நியூயார்க்கில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்து உள்ளார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய அயர்லாந்து அணி தயாராகி வருகிறது.
பலம் மற்றும் பலவீனம்:நியூயார்க் மைதானத்தில் இந்திய அணி ஏற்கனவே வங்கதேசத்துடன் பயிற்சி போட்டியில் விளையாடி வெற்றி பெற்றுள்ளது. விராட் கோலி, ரிஷப் பண்ட, சூர்யகுமார் யாதவ் என ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமாக உள்ளது. ஹர்திக் பாண்டியா பயிற்சி போட்டியில் அதிரடியாக விளையாடி ஃபார்மிற்கு திரும்பியுள்ளார். ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் அதிக விக்கெட்டுகள் எடுக்க வாய்ப்புள்ளது.
அதேபோல், அயர்லாந்து அணியில் அநேக வீரர்கள் புதுமுகமாக இருந்தாலும், தொடக்க ஆட்டக்காரர் பால் ஸ்டெர்லிங், ஜாஷ் லிட்டில் ஆகியோரது அனுபவம் அணிக்கு உதவும். டெஸ்ட் போட்டிகள் அந்தஸ்து பெற்றுள்ள அயர்லாந்து அணி கடந்த 2022 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணியை வென்று அதிர்ச்சி அளித்தது.