சென்னை: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இத்தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா மகளிர் அணி முழுமையாக கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனைத்தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்று சென்னையில் தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இந்தியா மகளிர் அணி பவுலிங் தேர்வு செய்தது. தென் ஆப்பிரிக்கா தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் உல்வரிட்த், பிரிட்ஸ் ஆகியோர் நல்ல தொடக்கத்தை வழங்கினர்.
இருவரும் அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தனர். முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்த நிலையில், உல்வரிட்த் 33 ரன்களுக்கு அவுட்டானார். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய காப் அணியின் ரன் ரேட்டை அதிகரிக்க செய்தார். பிரிட்ஸ், காப் இருவரும் இந்தியாவின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது.
தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக பிரிட்ஸ் 81 ரன்களும், காப் 57 ரன்களும் அடித்தனர். கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா மகளிர் அணியின் ஷஃபாலி வெர்மா, மந்தனா ஆகியோர் அபாரமாக ஆடினர். ஷஃபாலி வெர்மா 18 ரன்கள் சேர்த்த நிலையில், காகா பந்தில் அவுட்டானார். இதனைதொடர்ந்து களமிறங்கிய ஹேமலதா 14 ரன்களுக்கு நடையை கட்டினார். பின்னர் களமிறங்கிய இந்தியா கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், பொறுமையாக ரன்கள் சேர்த்தார். ஹர்மன்பிரீத் கவுர் 35 ரன்களுக்கு அவுட்டானார்.
பின்னர் வந்த ரோக்ரீகஸ் அதிரடியாக ரன்கள் சேர்த்தார். மறுமுனையில் விளையாடிய மந்தனாவும் அதிரடி காட்ட ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. மந்தனா 46 ரன்களுக்கு ட்ரையான் ஓவரில் அவுட்டானார். ரோட்ரீகஸ் 53 ரன்களுக்கு அவுட்டாகாமல் இருந்தார். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணியினர் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: பாரிஸ் ஒலிம்பிக் 2024; 5 தமிழர்கள் உட்பட 28 பேர் கொண்ட இந்திய தடகள அணி அறிவிப்பு! - Paris Olympics 2024