நியூயார்க்: 9வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஜூன் 2ஆம் தேதி தொடங்கி ஜூன் 29ஆம் தேதி வரை பல உலக நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஜூன்.10) நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் 20வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பரிக்கா - வங்காள தேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
அதன்படி, தென்னாப்பிரிக்கா தனது இன்னிங்ஸ்ஸைத் தொடங்கியது. தென்னாப்பிரிக்காவின் தொடக்க வீரர்களாக ரீசா ஹென்ட்ரிக்ஸ், குயின்டன் டி காக் ஜோடி களமிறங்கியது. முதல் ஓவரில் குயின்டன் டி காக் சிக்ஸ், பவுண்டரி என மாறி மாறி விளாசினார். வந்த வேகத்தில் ரீசா ஹென்ட்ரிக்ஸ் பெவிலியன் திரும்ப ஐடன் மார்க்ரம் களம் கண்டார்.
ஹசன் சாகிப் வீசிய பந்தில் குயின்டன் டி காக் எல்பிடபிள்யூ ஆனார். அடுத்தடுத்து தென்னாப்பிரிக்கா அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது. டிரிஸ்டன் ஸ்டப்ஸ் சொற்ப ரன்னில் வெளியேறினார். டேவிட் மில்லர் களம் கண்டார். கிளாசன் - மில்லர் பார்ட்னர்ஷிப் போட்டு அணிக்கு ரன்களை குவித்தனர். கிளாசன், மில்லர் சிக்ஸ் விளாச 10 ஓவர் முடிவிற்கு 57-4 என்ற கணக்கில் அணி விளையாடியது. இருவரும் அதிரடியாக விளையாடினர்.