தர்மசாலா: இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக 5வது டெஸ்ட் மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று தர்மசாலாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 218 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனைத் தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கி விளையாடி வருகிறது, இந்திய அணி.
2வது நாள் முடிவில், இந்திய அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 473 ரன்கள் குவித்து, இங்கிலாந்து அணியை விட 255 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இதில் தொடக்க வீரராக களம் இறங்கிய ரோகித் சர்மா, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார். 162 பந்துகளில் 103 ரன்கள் குவித்து வெளியேறினார்.
இது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவுக்கு 12வது சதம் ஆகும். மேலும், ரோகித் சர்மா இன்று சதம் விளாசியதன் மூலம், சில சாதனைகளை படைத்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்த இந்திய தொடக்க வீரர் என்ற சுனில் கவாஸ்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
அதேபோல், 2021ஆம் ஆண்டிற்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய வீரராக 6 சதம் விளாசி, இந்த பட்டியலிலும் அவர் முதல் இடத்தில் உள்ளார். இதனைத் தொடர்ந்து, 4 சதங்களுடன் சுப்மன் கில் 2வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.