ஐதராபாத்: வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றி ஒயிட் வாஷ் செய்தது இந்தியா. இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் தமிழக வீரர் அஸ்வினின் பங்கு என்பது அளப்பறியது. சென்னையில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து கொண்டு இருக்கும் போது களமிறங்கிய அஸ்வின் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார்.
மேலும் அந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார் அஸ்வின். இதனால் அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. அதேபோல் கான்பூரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டும், இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டும் என கைப்பற்றி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
உலக சாதனை படைத்த அஸ்வின்:
வங்கதேச தொடரில் சிறப்பாக செயல்பட்ட அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், தொடர் நாயகன் விருது வாங்கியதில் அஸ்வின் உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். இதுவரை அவர் 11 முறை தொடர் நாயகன் விருது வாங்கி உள்ளார். அதேநேரம் இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரனும் 11 முறை தொடர் நாயகன் விருது வாங்கி உள்ளார்.