ராஜஸ்தான்: 17வது ஐபிஎல் தொடரின் 38வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. ஜெய்ப்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் பாண்டியா பேட்டிங் தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய ரோகித் சர்மா, இஷான் கிஷன் ஜோடிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ரோகித் சர்மா 6 ரன்களில் வந்த வேகத்தில் அவுட்டானார்.
அதேபோல் இஷான் கிஷன், சந்தீப் சர்மா பந்தில் டக் அவுட்டானார். ஒரு பக்கம் விக்கெட் விழுந்தாலும் மறுபக்கம் திலக் வர்மா அணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். மறுமுனையில் முகமது நபி பொறுமையாக விளையாடி 23 ரன்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய வதேரா அதிரடியாக விளையாடி 49 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ட்ரெண்ட் போல்ட் மெதுவாக வீசிய பவுன்சரில் அவுட்டானார்.
கடைசி கட்ட ஓவர்களில் அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் பாண்டியா 10 ரன்களில் அவேஷ் கான் பந்தில் அவுட்டாகி ஏமாற்றினார். பின்னர் தொடர்ந்து வந்த டிம் டேவிட் வெறும் 3 ரன்களெ எடுத்தார். இறுதியாக, மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியின் சந்தீப் சர்மா அபாரமாக பந்துவீசி 5 விக்கெட் எடுத்தார்.