ஜெய்ப்பூர் : 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 22 ஆம் தேதி தொடக்க விழாவுடன் கோலாகலமாக தொடங்கியது. ஜெய்ப்பூரில் இன்று (மார்ச்.24) மாலை 3.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் அணியின் இன்னிங்சை யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் தொடங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 13 ரன்கள் சேர்த்தனர். ஜோஸ் பட்லர் 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து சிறிது நேரத்திலேயே மற்றொரு தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 24 ரன்கள் அடித்த கையோடு நடையை கட்டினார். இதன் பின் கேப்டன் சஞ்சு சாம்சன், ரியான் பராக் கூட்டணி அமைத்து அணியை சரிவில் இருந்து மீட்டுச் சென்றனர். சிறப்பாக விளையாடிய ரியான் பராக் 43 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய ஷிம்ரான் ஹெட்மயர் பெரிய அளவில் சோபிக்கவில்லை. ஹெட்மயர் 5 ரன்களில் நடையை கட்டி ஆச்சரியம் அளித்தார். இதனிடையே ஒற்றை ஆளாக போராடிக் கொண்டு இருந்த சஞ்சு சாம்சன் அரை சதம் கடந்து அணியின் ரன் வேகத்தை சீரான இடைவெளியில் நகர்த்தி சென்றார்.
20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய கேப்டன் சஞ்சு சாம்சன்ச் 82 ரன்கள் விளாசி கடைசி வரை களத்தில் நின்றார். அவருக்கு துணையாக துருவ் ஜூரல் 20 ரன்கள் எடுத்தார். லக்னோ அணியை பொறுத்தவரை நவீன் உல் ஹக் 2 விக்கெட்டும், மொஷின் கான், ரவி பிஷ்னாய் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி விளையாடுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டு நடப்பு ஐபிஎல் சீசனை வெற்றியுடன் லக்னோ சூப்பர் ஜெயன்டஸ் அணி எதிர்கொள்ளுமா என அந்த அணியின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க :ஐபிஎல் 2024: ராஜஸ்தானை எதிர்கொள்ளும் லக்னோ..மும்பையை சமாளிப்பாரா? சுப்மன் கில்! - Today Ipl Match