ராஞ்சி: இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறார். 2011ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராகத் தனது டெஸ்ட் பயணத்தைத் தொடங்கினார் அஷ்வின். தற்போது 500 விக்கெட்களை கடந்து உலக அளவில் 9வது இடத்திலும், இந்திய அளவில் 2வது இடத்திலும் உள்ளார்.
இந்த நிலையில் தான் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றொரு சாதனையைப் படைத்துள்ளார். இங்கிலாந்து அணி இந்தியச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. அந்த வகையில், 3 டெஸ்ட் போட்டிகள் நிறைவடைந்த 4வது டெஸ்ட் போட்டி இன்று (பிப்.23) ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் நாள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 302 ரன்கள் சேர்த்துள்ளது. இதில் ஜானி பேரிஸ்டோவின் விக்கெட்டினை வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிராக 100 விக்கெட்களை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ரவிச்சந்திரன் அஷ்வின் பெற்றுள்ளார்.