ஹைதராபாத்:உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடர் சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்தது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், மற்றும் தென்னாப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான், இந்தியா, ஆகிய நாடுகள் பங்கேற்று விளையாடின.
இந்த தொடரின் இறுதிப் போட்டியில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய அணி, யூனுஸ் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இதனைக் கொண்டாடும் வகையில் யுவராஜ், ஹர்பஜன், மற்றும் ரெய்னா ஆகியோர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தனர்.
சர்ச்சையான வீடியோ:அந்த வீடியோவில் சமீபத்தில் வெளியான இந்தி திரைப்படப் பாடலான "தோபா, தோபா" வுக்கு நடனம் ஆடுவது போல தங்கள் கால்களை இழுத்து, இழுத்து மாற்றுத்திறனாளிகள் போல நடந்து வந்து நடனம் ஆடினர். மேலும் தாங்கள் மிகவும் சோர்ந்து இருப்பதாக அந்த பதிவில் ஹர்பஜன் சிங் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னாள் பாரா பேட்மிண்டன் வீரர் மானசி ஜோஷி, உள்ளிட்ட பலர் இந்த வீடியோவிற்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்தநிலையில் மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பு மேம்பாட்டுக்கான தேசிய மையம் (NCPEDP) என்ற அரசு சாரா அமைப்பின் நிர்வாக இயக்குநரான அர்மான் அலி என்பவர், மாற்றுத்திறனாளிகளைக் கேலி செய்யும் வகையில் வீடியோ வெளியிட்டதாக யுவராஜ், ஹர்பஜன், ரெய்னா ஆகிய மூவர் மீதும் அமர் காலனி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.