பாரீஸ்:பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வரும் பராலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டியில் ஆடவர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் நிதேஷ் குமார் தங்கம் வென்றார். பிரிட்டன் வீரர் டேனியல் பெத்தலை 21-க்கு 14, 18-க்கு 21, 23-க்கு 21 என்ற செட் கணக்கில் வீழ்த்தி நிதேஷ் குமார் தங்கம் வென்று சாதனை படைத்தார்.
பாராலிம்பிக்ஸ் ஆடவர் பேட்மிண்டன் போட்டியின் SL3 பிரிவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய வீரர் நிதேஷ் குமார், கிரேட் பிரிட்டனை சேர்ந்த டேனியல் பெத்தல் என்பவரை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே அபாரமாக விளையாடி வந்த நிதேஷ் குமார், தொடக்க செட்டை 21-க்கு 14 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
இரண்டாவது செட்டில் பிரிட்டன் வீரர் டேனியல் பெத்தல் கடும் சவால் அளித்தார். கடுமையான போட்டிக்கு மத்தியில் நிதேஷ் குமாரால் இரண்டாவது செட்டில் புள்ளிகளை குவிக்க முடியவில்லை. அடுத்தடுத்த ஸ்மாஸ்களால் பிரிட்டன் வீரர் டேனியல் பெத்தல் இரண்டாவது செட்டை 21-க்கு 18 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
இதனால் வெற்றியை தீர்மானிக்கு 3வது செட் யாருக்கு என கடுமை போட்டி ஏற்பட்டது. இரண்டு வீரர்களும் தோல்வியை எளிதில் எடுத்துக் கொள்ள தயாராக இல்லை. இதனால் ஆட்டத்தில் அனல் பறந்தது. இந்திய வீரருக்கு ஈடுகொடுத்து பிரிட்டன் வீரர் கடுமையாக விளையாடினார். இதனால் போட்டி டை பிரேக்கருக்கு சென்றது.
முதலில் பின்தங்கிய நிதேஷ் குமார், அதன்பின் தனது அபார ஆட்டத்தின் மூலம் பிரிட்டன் வீரரை கலங்கடித்தார். இறுதியில் இந்திய வீரர் நிதேஷ் 23-க்கு 21 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை உச்சி முகர்ந்தார். மேலும் பாராலிம்பிக்ஸ் விளையாட்டில் இந்தியா சார்பில் தங்கம் வென்ற முதல் பேட்மிண்டன் வீரர் சிறப்பையும் நிதேஷ் குமார் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பாரீஸ் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு தொடரில் இந்தியாவுக்கு இரண்டாவது தங்கப் பதக்கம் கிடைத்தது. இந்திய அணி 2 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களுடன் ஒட்டுமொத்த பதக்க பட்டியலில் 22வது இடத்திற்கு முன்னேறியது. முன்னதாக இந்திய அணி 30வது இடத்தில் இருந்தது, நிதேஷ் குமாரின் தங்கப் பதக்கத்தின் மூலம் பட்டியலில் விறுவிறுவென 8 இடங்கள் முன்னேறி 22வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:செல்போனால் பறிபோன பதக்கம்! இத்தாலி பாராலிம்பிக் வீரருக்கு என்ன நடந்தது? - Italy rower lost medal paralympics