மும்பை: 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மே.3) இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 51வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை விளையாடிய 9 ஆட்டங்களில், 6ல் வெற்றியும், 3 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. கடைசியாக விளையாடிய 6 ஆட்டங்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மூன்றில் தோல்வியை சந்தித்துள்ளது.
மறுபுறம் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய 10 ஆட்டங்களில் 3ல் வெற்றியும், 7ல் தோல்வியுடன் 6 புள்ளிகள் மட்டும் பெற்று புள்ளிகள் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. கடந்த ஆட்டத்தில் லக்னோ அணியிடம் தோற்றதை தொடர்ந்து மும்பை அணியின் பிளே ஆப் சுற்று வாய்ப்பு ஏறத்தாழ மங்கிப் போனது.
மும்பை இந்தியன்ஸ் அணி இனி வரும் 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று, மற்ற அணிகளின் முடிவு அதற்கு சாதகமாக அமைவதுடன், ரன்-ரேட்டிலும் திடமாக இருந்தால் ஒருவேளை அடுத்த சுற்றுக்கு நுழைவதில் அதிர்ஷ்டம் அடிக்கலாம். மாறாக இன்றைய ஆட்டத்தில் தோற்றால் அந்த அணி முதல் அணியாக நடப்பு ஐபிஎல் சீசனை விட்டு வெளியேறும்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை - கொல்கத்தா அணிகள் இதுவரை 32 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. அதில் மும்பை அணி 23 முறையும், கொல்கத்தா அணி 9 தடவையும் வெற்றி பெற்றுள்ளன. அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.