தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தோனியை போல் சாதித்த ஸ்வப்னில் குசலே... இரண்டு பேருக்கும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா? - Paris Olympics 2024 - PARIS OLYMPICS 2024

பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசலே, கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனியை போல் மத்திய ரயில்வேயில் டிக்கெட் கலெக்டராக பணியாற்றி உள்ளார்.

Etv Bharat
Swapnil Kusale - MS Dhoni (AP)

By ETV Bharat Sports Team

Published : Aug 1, 2024, 4:41 PM IST

பாரீஸ்:பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வரும் 33வது ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் 50 மீட்டர் ரைபிள் 3 நிலை துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசலே வெண்கலம் வென்று நாட்டு பெருமை சேர்த்தார். நடப்பு ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முன்றாவது பதக்கம் வென்று தந்த வீரர் ஸ்வப்னில் குசலே.

இதே துப்பாக்கிச் சுடுதலில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் மனு பாகெர் மற்றும் கலப்பு அணிகள் பிரிவில் மனு பாகெர் மற்றும் சரப்ஜோதி சிங் ஆகியோர் முறையே இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று தந்துள்ளனர். நடப்பு ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த மூன்று வெண்கலப் பதக்கங்களும் துப்பாக்கிச் சுடுதல் மூலம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் வென்று தந்த 7வது துப்பாக்கிச் சுடுதல் வீரர் மட்டுமின்றி, 50 மீட்டர் ரைபிள் 3 நிலை பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சிறப்பையும் ஸ்வப்னில் குசலே பெற்றுள்ளார். மகாரஷ்டிர மாநிலம் கொல்ஹபூர் பகுதியில் வசித்து வருபவர் ஸ்வப்னில் குசலே.

ஆனால் ரத்னகிரி தாலுகா கம்பல்வாடி பகுதியை பூர்வீகமாக கொண்டவர் ஸ்வப்னில் குசலே. இவருக்கும், கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு ஒரு பொருத்தம் மிக நெருக்கமாக உள்ளது. கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தனது தொடக்க வாழ்க்கையை மத்திய ரயில்வேயில் ஒரு டிக்கெட் கலெக்டராக தொடங்கினார்.

அதேபோல் ஸ்வப்னில் குசலேவும் தனது ஆரம்ப காலத்தில் மத்திய ரயில்வேயில் டிக்கெட் கலெக்டராக பணியாற்றி உள்ளார். ஸ்வப்னில் குசலேவின் தந்தை சுரேஷ் குசலே தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறார். தாய் பஞ்சாயத்து தலைவராக உள்ளார். ஸ்வப்னிலின் இளைய சகோதரர் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

ஆரம்ப கால பள்ளிப் படிப்பை ரத்தனிகிரி தாலுகாவில் முடித்த ஸ்வப்னில் சுரேஷ், வெளியூர் சென்று உயர் கல்வியை முடித்துள்ளார். பள்ளிப் படிப்புடன் விளையாட்டின் மீது ஏற்பட்ட ஆர்வத்தால் புனேவில் உள்ள தனியார் விளையாட்டு கிளப்பில் இணைந்து பயிற்சி பெற்று வந்துள்ளார். குறிப்பாக துப்பாக்கிச் சுடுதல் மீது அதிக ஆர்வம் கொண்டு இருந்த ஸ்வப்னில் குசலே தனது 16 வயதில் நாசிக் சென்று அதற்காக பயிற்சி எடுத்துக் கொள்ள தொடங்கி உள்ளார்.

பத்தாம் வகுப்பு முடித்த பின் முழு நேரமாக துப்பாக்கிச் சுடுதலில் ஈடுபட விரும்பிய ஸ்வப்னில் சுரேஷ் குடும்பத்தின் அறிவுறுத்தலின் படி தொடர்ந்து கல்வி கற்றுள்ளார். இருப்பினும், 2008ஆம் ஆண்டு நடைபெற்ற பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கிச் சுடுதல் வீரர் அபினவ் பிந்ராவின் ஆட்டத்தை பார்ப்பதற்காக தனது 12 ஆம் பொதுத் தேர்வு கைவிட்டுள்ளார்.

கடந்த 2015ஆம் அண்டு மத்திய ரயில்வேயில் வேலை கிடைத்தும் துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டின் மீதான ஸ்வப்னில் குசலேவின் தாகம் தீரவில்லை. தொடர்ந்து பயிற்சி எடுத்த ஸ்வப்னில் குசலே, இன்று நாட்டுக்காக சர்வதேச அரங்கில் பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார். ஸ்வப்னில் குசலேவின் வெற்றியை தொடர்ந்து கொல்ஹபூர் கிராமமே விழாக் கோலம் பூண்டு உள்ளது. கிராம மக்கள் பட்டாசுகளை வெடித்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீரர்கள் பட்டியல்:

ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்: வெள்ளிப் பதக்கம், ஏதென்ஸ் ஒலிம்பிக்ஸ் (2004)

அபினவ் பிந்த்ரா: தங்கப் பதக்கம், பீஜிங் ஒலிம்பிக் (2008)

ககன் நரங்: வெண்கலப் பதக்கம், லண்டன் ஒலிம்பிக்ஸ் (2012)

விஜய் குமார்: வெள்ளிப் பதக்கம், லண்டன் ஒலிம்பிக் (2012)

மனு பாகர்: வெண்கலப் பதக்கம், பாரிஸ் ஒலிம்பிக்ஸ் (2024)

மனு பாகர்-சர்ப்ஜோத் சிங்: வெண்கலப் பதக்கம், பாரிஸ் ஒலிம்பிக்ஸ் (2024)

ஸ்வப்னீல் குசேலே: வெண்கலப் பதக்கம், பாரிஸ் ஒலிம்பிக்ஸ் (2024)

இதையும் படிங்க:ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 3வது பதக்கம்! துப்பாக்கிச் சுடுதல் ஸ்வப்னில் குசலே வெண்கலம்! - Paris Olympics 2024

ABOUT THE AUTHOR

...view details