ஐதராபாத்:18வது ஐபிஎல். தொடர் அடுத்த வருடம் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற உள்ளது. ஐபிஎல் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலம் வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற உள்ளது. ஏலத்திற்கு முன்னதாக ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் தங்களது அணியில் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை கடந்த அக்டோபர் 31ஆம் தேதி வெளியிட்டன.
அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் 5 வீரர்களை தக்க வைத்துள்ளது. பஞ்சாப் 2 வீரர்களையும், பெங்களூரு அணி 3 பேரையும், டெல்லி 4 பேரையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 வீரர்களை தக்க வைத்துள்ளது.
இதில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காயம் காரணமாக கடந்த சீசனில் விளையாடவில்லை. இதனால் அவரை ஏலத்திற்கு முன்பாக குஜராத் நிர்வாகம் கழற்றி விட்டுள்ளது. ஆனால் தற்போது காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள ஷமி உள்ளூர் தொடர்களில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
இதனால் ஐபிஎல். ஏலத்தில் பல அணிகள் இவரை வாங்க மும்முரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அடிக்கடி காயத்தை சந்திக்கும் முகமது ஷமியை எந்த அணியும் பெரிய தொகைக்கு வாங்காது என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் சமீபத்தில் தெரிவித்தது சர்ச்சையை கிளப்பியது.