ஐதராபாத்: மத்தியப் பிரதேச அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் பெங்கால் அணிக்காக களமிறங்கிய முகமது ஷமி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முகமது ஷமி விளையாட வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ஓராண்டாக மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்தார். இதன்பின் பயிற்சியில் ஈடுபட்டு வந்த முகமது ஷமி, ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் முகமது ஷமி முழு பிட்னஸை எட்டாததால், அவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை. இந்த நிலையில் ரஞ்சி டிராபி தொடரில் பெங்கால் அணிக்காக முகமது ஷமி விளையாட இருப்பது தெரிய வந்தது. மத்தியப் பிரதேச அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் பெங்கால் அணி சார்பில் களமிறங்கிய நிலையில், முகமது ஷமியும் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார்.
இதில் முதலில் பேட்டிங் ஆடிய பெங்கால் அணி ஷாபாஸ் அஹ்மத் மற்ரும் கேப்டன் அனுஸ்துப் மஜும்தாரின் ஆட்டத்தால் 228 ரன்களை சேர்த்தது. பின்னர் களமிறங்கிய மத்தியப் பிரதேச அணி முதல் நாள் ஆட்டம் நேரம் முடிவில் மத்தியப் பிரதேசம் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் சேர்த்திருந்தது. நட்சத்திர வீரர் முகமது ஷமிக்கு முதல் நாளில் ஒரு விக்கெட் கூட கிடைக்கவில்லை.
இந்த நிலையில் 2வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. அதில் சிறப்பாக செயல்பட்ட பெங்கால் அணி பவுலர்கள், மத்தியப் பிரதேச அணியை 167 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தனர். அதிலும் நட்சத்திர வீரர் முகமது ஷமி 19 ஓவர்களில் 54 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் ரசிகர்களும் பலரும் முகமது ஷமியை பாராட்டி வருகின்றனர்.
இதன் காரணமாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமி தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. பார்டர் கவாஸ்கர் தொடரின் 2வது பாதியில் நடக்கும் போட்டிகளில் விளையாட முகமது ஷமியை தயார் செய்வதோடு, இந்திய வீரர்களுடன் பயிற்சி மேற்கொள்ள அவரை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப வேண்டும்ம் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க:டாடா ஸ்டீல் செஸ் சாம்பியன்ஷிப்: பிரக்ஞானந்தா - கார்ல்சென் ஆட்டம் டிரா!