ஹைதராபாத்:இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹைதராபாத் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் கடந்த ஜனவரி 25ஆம் தேதி தொடங்கியது.
விறுவிறுப்பாக நடந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டு இருந்த போது, இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி ஐசிசி அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து உள்ளது.
இரண்டாவது இன்னிங்சில் 81வது ஓவர் வீசிக் கொண்டு இருந்த பும்ரா, இங்கிலாந்து வீரர் ஒல்லி போப் ரன் எடுக்க முயன்ற போது, ஓடுதளத்தில் நின்று கொண்டு அவருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறப்பட்டு உள்ளது. இது குறித்து கள நடுவர்கள் பால் ரீஃபெல் மற்றும் கிறிஸ் கஃபேனி, மூன்றாவது நடுவர் மரைஸ் எராஸ்மஸ் மற்றும் நான்காவது நடுவர் ரோஹன் பண்டிட் ஆகியோர் ஐசிசியிடம் முறையிட்டதால் பும்ரா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஜஸ்பிரித் பும்ராவிற்கு ஒரு மதிப்பிழப்பு புள்ளி வழங்கப்பட்டுள்ளது. இது ஐசிசி நடத்தை விதிகளின்படி லெவல் 1 குற்றமாகும். இதே போல் தொடர்ந்து நான்கு மதிப்பிழப்பு புள்ளிகள் வழங்கப்பட்டால் வீரர் இடை நீக்கம் அல்லது ஒரு போட்டியில் கலந்து கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 24 மாதங்களில் பும்ரா மீது எடுக்கப்படும் முதல் நடவடிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக முதல் இன்னிங்சில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து களம் இறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 436 ரன்களுக்கு ஆல் ஆவுட் ஆனது. அதன்பின் இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் அடுத்தடுத்து வீரர்கள் ஆட்டமிழந்தாலும் ஒற்றை ஆளாக நின்று ஓல்லி போப் சிறப்பாக விளையாடி 196 ரன்களை குவித்தார்.
இதன் காரணமாக 2வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 416 ரன்களை குவித்தது. இதனையடுத்து 231 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 202 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.
இதையும் படிங்க:ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம்: இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் சாம்பியன்! 22 வயதில் பட்டம் வென்று அசத்தல்!