ஐதராபாத்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி டெஸ்ட் வீரர்கள் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் கஜிசோ ரபடா டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார். வங்கதேச அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட்டுகள் வீழ்த்தியதை தொடர்ந்து தரவரிசையில் ரபடா அதிரடி ஏற்றத்தை கண்டுள்ளார்.
இந்திய வேகப்பந்து வீரர் ஜஸ்பிரீத் பும்ரா 3வது இடத்திற்கு தள்ளப்பட்டார். இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஜோஸ் ஹாசில்வுட் உள்ளார். முதல் முறையாக பாகிஸ்தான் வீரர் நொமன் அலி டாப் 10 தரவரிசையில் நுழைந்துள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடியதை தொடர்ந்து அவர் 9வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.
பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய சுழல் மன்னன் ரவிச்சந்திரன் அஸ்வின் 4வது இடத்தை பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் 5வது இடத்தில் நீடிக்கிறார். அதேபோல் இந்தியாவுக்கு எதிரான கடந்த புனே டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு வித்திட்ட சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னர் 30 இடங்கள் முன்னேறி முதல் முறையாக 44வது இடத்திற்கு முன்னேறினார்.
இந்தியாவுக்கு எதிரான புனே டெஸ்ட் போட்டியில் அபாரமாக பந்துவீசிய மிட்செல் சான்ட்னர் முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மொத்தம் அந்த டெஸ்ட் போட்டியில் மிட்செல் சான்ட்னர் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. பேட்ஸ்மேன்கள் தரவரிசையை பொறுத்தவரை இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 1 இடம் முன்னேற்றம் கண்டு 790 புள்ளிகளுடன் 3வது இடத்தை பிடித்துள்ளார்.