லக்னோ:நடப்பு ஐபிஎல் தொடரின் 44வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர் கொண்டது. ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் 48 பந்துகளில் 76 ரன்கள் குவித்தார். தீபக் ஹூடா 31 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார்.
ராஜஸ்தான் அணி தரப்பில் சந்தீப் சர்மா 2 விக்கெட்டுகளையும், அவேஷ் கான், அஸ்வின், போல்ட் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனையடுத்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் ஆகியோர் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கினர். இதில் பட்லர், 34 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் அவுட் ஆனார். மற்றொரு ஓப்பனிங் பேட்ஸ்மேனான ஜெய்ஸ்வால் 24 ரன்களுக்கு அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். அடுத்த வந்த ரியான் பராக் 11 ரன்களுக்கு அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
இதனால், 78 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்த தடுமாறிய ராஜஸ்தான் அணியை, கேப்டன் சாம்சன் மற்றும் துருவ் ஜுரல் ஆகியோர் மீட்டனர். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் விளாசினர். இதனால் 19 ஓவரின் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சாம்சன் 33 பந்துகளில் 71 ரன்களுடனும், துருவ் ஜுரல் 52 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். நடப்பு ஐபிஎல் தொடரில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் ஒரே ஒரு போட்டியில் மட்டும் தோல்வியை சந்தித்து 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இதன் மூலம் 16 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை ஏறத்தாழ உறுதி செய்துவிட்டது. இருப்பினும், இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதேபோல், இந்த போட்டியில் தோல்வியை சந்தித்துள்ள லக்னோ அணி, இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 5-ல் வெற்றி 4-ல் தோல்வி என புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. இருப்பினும், அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற வேண்டும் என்றால் இனி வரவிருக்கும் 5 போட்டிகளில் பொறுப்புடன் விளையாடி குறைந்தபட்சம் 4-ல் வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:டி20 உலகக் கோப்பையில் கம்பேக் கொடுக்கும் யுவராஜ் சிங்.. ஐசிசி கொடுத்த இன்ப அதிர்ச்சி!