பீகார்:மகளிர் ஆசிய சாம்பியன்ஷிப் ஆக்கி போட்டியின் இறுதி ஆட்டம் பீகார் மாநிலத்தின் ராஜ்கிர் பகுதியில் நடைபெற்றது. இதில் குரூப் மற்றும் நாக் அவுட் சுற்றுகளில் தோல்வியே தழுவாத இந்திய மகளிர் அணி, இறுதிப் போட்டியில் சீன மகளிரை எதிர்கொண்டது. போடியின் முதல் பாதியில் இரு அணிகளுமே கோல் போடவில்லை.
முதல் சுற்றில் கிடைத்த வாய்ப்பை சீன வீராங்கனைகள் கோல் திருப்ப முயற்சித்த நிலையில், அதை சாதுர்யமாக விளையாடி இந்திய வீராங்கனைகள் தடுத்தனர். இதனால் ஒரு கோல் கூட பதிவாகாமல் முதல் பாதி ஆட்டம் நிறைவு பெற்றது. தொடர்ந்து இரண்டாவது பாதியில் கோல் அடிக்க இரு நாட்டு வீராங்கனைகளும் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை இந்திய வீராங்கனை தீபிகா தவறவிட்டார். இருப்பினும் போட்டியின் மூன்றாவது பாதியில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அவர் கோல் அடித்தார். இதனால் புள்ளிப் பட்டியலில் இந்தியா 1-க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. பதில் கோல் திருப்ப சீன வீராங்கனைகள் கடுமையாக முயற்சித்த போதும், அதை இந்திய வீராங்கனைகள் தவுடுபொடியாக்கினர்.
இறுதியில் ஆட்ட நேர முடிவில் இந்திய மகளிர் அணி 1-க்கு 0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற மூன்றாவது முறையாக ஆசிய சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இந்த வெற்றியின் மூலம் அதிக முறை ஆசிய சாம்பியன் பட்டத்தை தன்வசம் வைத்து இருந்த தென் கொரிய (3 முறை) அணியின் சாதனையையும் இந்திய மகளிர் அணி சமன் செய்தது.