பார்படோஸ்:9வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற்றது. இதில் நேற்று இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபாரமாக விளையாடிய இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இரண்டாவது முறையாக டி20 உலக கோப்பையை கைப்பற்றியது.
கடந்த 2007ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டில் இந்திய அணி சாம்பியன் பட்டம் கைப்பற்றி இருந்தது. அதன்பின் மீண்டும் உலக கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது. கேப்டன் தோனி தலைமையில் முதல் முறையாக இந்திய அணி 20 ஓவர் உலக கோப்பையை கைப்பற்றி இருந்தது.
அதன்பின் ஏறத்தாழ 17 ஆண்டுகள் இந்திய அணி 20 ஓவர் உலகக் கோப்பை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இரண்டு சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆகி உள்ளார்.
2007ஆம் ஆண்டு வெறும் 26 வயதே ஆன மகேந்திர சிங் டோனி இந்திய அணிக்காக கோப்பை வென்று தந்தார். தற்போது 37 வயதான ரோகித் சர்மா மீண்டும் இந்திய அணிக்கு கோப்பை வென்று தந்துள்ளார். 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வென்ற மிக அதிக வயது கேப்டன் என்ற சிறப்பை ரோகித் சர்மா பெற்றார்.
மேலும் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தனது 50வது வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் அதிக டி20 ஆட்டங்களில் வெற்றிகளை தேடித் தந்த கேப்டன் என்ற சாதனையையும் ரோகித் சர்மா படைத்தார். நடப்பு உலக கோப்பை தொடரில் தோல்வியே சந்திக்காமல் இந்திய அணி உலக கோப்பையை வென்றுள்ளது.
இதன் மூலம் ஒரு உலக கோப்பை சீசனில் தோல்வியே சந்திக்காமல் சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணி என்ற மைல்கல்லையும் இந்திய அணி பெற்றது. அதேபோல் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு பிறகு இரண்டு முறை 20 ஓவர் உலக கோப்பையை வென்ற அணி என்ற சிறப்பையும் இந்தியா பெற்றது.
இதையும் படிங்க: டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் சாதனைகள் என்னென்ன? - India Vs South Africa records