டெல்லி:இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், வீரர் பஜ்ரங் புனியா நேற்று (செப்.7) காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் இணைந்தது குறித்து பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத் 10 நாட்களில் விளக்கம் அளிக்கக் கோரி இந்திய ரயில்வே நோட்டீஸ் வழங்கி உள்ளது.
ரயில்வே வேலை ராஜினாமா:
இந்திய ரயில்வேயில் பார்த்து வந்த வேலையை ராஜினாமா செய்த வினேஷ் போகத், பஜ்ரங் புனியா வெள்ளிக்கிழமை காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சியில் இணைந்த பஜ்ரங் புனியாவுக்கு ஆல் இந்தியா கிஷான் காங்கிரஸ் அமைப்பின் செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டது.
முன்னதாக, ஹரியானா சட்டப் பேரவை தேர்தலில் மற்றொரு மல்யுத்த வீரர் மற்றும் பாஜக வேட்பாளர் யோகஷ்வர் தத்துக்கு எதிராக பஜ்ரங் புனியா களமிறங்கப்படலாம் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், ஹரியானா சட்டப் பேரவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் 31 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் பஜ்ரங் புனியா பெயர் இடம் பெறவில்லை.
வினேஷ் போகத்துக்கு சீட்:
அதேநேரம் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு ஜுலானா தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சி வாய்ப்பு அளித்துள்ளது. வினேஷ் போகத்தின் பெயர் காங்கிரஸ் வெளியிட்ட முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அதேநேரம், வினேஷ் போகத்தின் சகோதரி மற்றும் பெரியப்பா பபிதா போகத், எம்எஸ் போகத் ஆகியோரும் பாஜகவில் உறுப்பினர்களாக உள்ளனர்.
வினேஷ் போகத் போட்டியிடும் ஜுலானா தொகுதிக்கு பாஜக சார்பில் இன்னும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படாத நிலையில், அந்த இடத்தில் பபிதா போகத் நிற்க வைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
ரயிவ்லே நோட்டீஸ்:
வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகியோர் அனுப்பிய ராஜினாமா கடிதத்தை இந்திய ரயில்வே இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது. இந்நிலையில், அரசுப் பணியில் இருக்கும் வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா தனிப்பட்ட கட்சியில் இணைந்தது, தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தது குறித்து விளக்கம் அளிக்கக் கோரி இரண்டு பேருக்கும் ரயில்வே நிர்வாகம் நோட்டீஸ் வழங்கி உள்ளது.
செப்டம்பர் 4ஆம் தேதி இருவரும் அரசியல் கட்சியில் இணைவது தொடர்பாக வெளியான செய்திகள் மற்றும் சமூக வலைதள பதவிகளை அடிப்படையாக கொண்டு அன்றைக்கே இருவரும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் 10 நாட்களில் இருவரும் பதிலளிக்க தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும் வடக்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஹிமான்சு ஷேகர் உபத்தாய் தெரிவித்துள்ளார்.
வினேஷ், பஜ்ரங்கிற்கு சிக்கல்:
நோட்டீஸ் அனுப்பப்பட்ட மறுநாள் இருவரும் தங்கள் வேலையை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் இணைந்த நிலையில், அடுத்த 10 நாட்களில் இது குறித்து இருவரும் பதிலளிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். அதேநேரம், இருவரது ராஜினாமாவும் ரயில்வேயால் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில், அவர் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் நிலவுவதாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க:UTT 2024: தியா சித்தலேவின் அபார ஆட்டத்தால் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது டெல்லி அணி! - Ultimate Table Tennis 2024