சென்னை: இந்தியா மற்றும் வங்கதேச அணிக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று (செப்.19) துவங்கியது. டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரோகித் சர்மா 19 பந்துகளை சந்தித்து 6 ரன்களை எடுத்து விக்கெட்டை பறிக்கொடுத்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். அதனைத் தொடர்ந்து, களமிறங்கிய இளம் வீரர் சுப்பன்கில் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.
மேலும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 9 நிமிடங்கள் மட்டுமே களத்தில் நின்று 6 ரன்களை அடித்திருந்த நிலையில் விக்கெட்டை பறி கொடுத்ததால் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது. இதனால், இந்திய அணி முதல் 10 ஓவர்களை கடப்பதற்குள் முக்கியமான 4 விக்கெட்களை இழந்தது.
சென்னை சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் நிலையில், இன்றைய போட்டியின் முதல் பாதி வேகப்பந்து வீச்சுக்கு சாதமாக அமைந்தது. வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் முகமது இந்திய அணியின் முக்கியமான 4 விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.
முதல் நாளின் பாதிவரை இந்திய அணியின் பேட்மேன்களை வங்கதேச வேகப்பந்து வீச்சாளர்கள் கட்டுக்குள் வைத்திருந்தனர். இந்திய அணியின் விக்கெட்கள் தொடர்ந்து சரிந்து வந்த நேரத்தில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் களம் இறங்கினார். நிதானமாக ஆடி வந்த ஜெய்ஸ்வால் பண்டுடன் ஜோடி சேர்ந்து இருவரும் நிலைத்துநின்று ஆடி 99 பந்துகளை சந்தித்து 62 ரன்களை எடுத்த நிலையில், ரிஷப் 39 ரன்கள் எடுத்து வேகபந்து வீச்சளர் ஹசன் முகமது பந்து வீச்சில் கீப்பர் லிட்டன் தாசிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
இதையும் படிங்க:செஸ் ஒலிம்பியாட்; தங்கத்தை நோக்கி நகரும் இந்தியா.. சீனாவை வீழ்த்தி 7வது சுற்றிலும் முன்னிலை!
அதனைத் தொடர்ந்து, களமிறங்கிய கே.எல்.ராகுல் 16 ரன்கள் மட்டுமே எடுத்து அவரும் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் அளித்தார். முதல் நாள் ஆட்டத்தின் பாதி நாட்களை கடப்பதற்குள் இந்திய அணி வீரர்கள் தங்களுடைய 4 விக்கட்டுகளை மளமளவென பறி கொடுத்ததால் ஆட்டம் பங்களாதேஷின் பக்கம் திரும்பியது. தொடர்ந்து நன்றாக விளையாடி வந்திருந்த ஜெய்ஸ்வாலும் 118 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
இதன் தொடர்ச்சியாக, இந்திய அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறங்கினார். ரசிகர்கள் அவரை உற்சாக வரவேற்க, ஜடேஜாவும் அஸ்வினும் விளையாட தொடங்கியது முதலே இந்திய அணியின் ஸ்கோர் நன்கு உயர்ந்தது. முதல் நாள் ஆட்டத்தில் 50வது ஓவரில் இந்திய அணியின் முதல் சிக்ஸை ரவீந்திர ஜடேஜா அடித்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். தொடர்ந்து அஸ்வினும் ஜடேஜாவும் களத்தில் நங்கூரம் போல நின்று வங்கதேசத்தின் பந்துவீச்சாளர்களின் பந்துகளை நாளா புறமும் விரட்டியடித்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினர்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிவந்த ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் போட்டியில் தனது 6வது சதத்தை பூர்த்தி செய்தார். சென்னையில் அவருக்கு இது இரண்டாவது சதமாகும். தொடர்ந்து விளையாடிய இருவரும் ரன்களை குவித்தனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 80 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 339 ரன் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ஜடேஜா 86 ரன்னும் ஜெய்ஸ்வால் 56 ரன்னும் எடுத்தனர்.
வங்கதேச தரப்பில் ஹசன் மொத்தமாக 18 ஓவர்களை வீசி 58 ரன்களை கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றினார்.
நாளை (செப்.20) தொடங்கும் இரண்டாவது நாள் ஆட்டத்தில் அஸ்வினும் ஜடேஜவும் அடித்து ஆடினால் இந்திய அணி வலுவான ஸ்கோரை பெற்று முன்னிலை பெரும் என்று கூறப்படுகிறது.
பாட்னர்ஷிப் சாதனை: இன்றைய ஆட்டத்தில் ஏழாவத விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அஸ்வின் -ஜடேஜா மொத்தம் 195 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இதுவே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் ஏழாவது விக்கெட்டுக்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்னாகும் என்பது குறிப்பிடத்தக்கது.