டெல்லி:பாரீஸ் ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹாக்கி அணி இன்று காலை நாடு திரும்பியது. டெல்லி விமான நிலையம் விரைந்த கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஹாக்கி அணிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற ஆடவர் ஹாக்கி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் கடந்த வியாழக்கிழமை (ஆக.8) இந்தியா - ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் அபாரமாக விளையாடிய இந்திய அணி ஸ்பெயினை 2-க்கு 1 என்ற கோல் கணக்கி வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு பின்னர் மீண்டும் இந்திய ஹாக்கி அணி பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தது. இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் கேரளாவை சேர்ந்த ஸ்ரீஜேஷ் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியுடன் ஹாக்கியில் இருந்து ஓய்வு பெற்றார்.
அவரது கடை ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கத்துடன் வெற்றி பெற்றார். ஏறத்தாழ 18 ஆண்டுகள் இந்திய ஹாக்கி அணிக்காக தொடர்ந்து விளையாடி வந்த ஸ்ரீஜேஷ் தனது நீண்ட நெடிய பயணத்தை நிறைவு செய்தார். ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணி இன்று (ஆக.10) காலை நாடு திரும்பியது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் விரைந்த இந்திய ஹாக்கி அணிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேளம் தாளம் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நடனக் கலைஞர்கள், ரசிகர்களுடன் நடனமாடி வீரர்கள் மகிழ்ந்தனர். தொடர்ந்து பேசிய இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், "பதக்கத்தை நாட்டுக்காக வெல்வது பெரிய விஷயம். நாங்கள் இறுதிப் போட்டிக்கு வந்து தங்கம் வெல்ல முயற்சித்தோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக எங்கள் கனவு நிறைவேறவில்லை.
ஆனால், நாங்கள் வெறுங்கையுடன் திரும்பவில்லை, மீண்டும் பதக்கங்களை வெல்வது ஒரு சாதனை. எங்கள் மீது பொழிந்த அன்பு ஒரு பெரிய விஷயம். தனது கடைசி போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த பிஆர் ஸ்ரீஜேஷ்க்கு, இது ஒரு உணர்ச்சிகரமான தருணம். அவர் ஓய்வு பெற்றாலும் எங்களுடன் இருப்பார்.
இந்திய அரசு, விளையாட்டு ஆணையம் மற்றும் ஒடிசா அரசாங்கத்தின் ஆதரவுக்கு நன்றி கூறுகிறேன். இப்போது எங்களுக்கு கிடைத்துள்ள அன்பு, எங்கள் பொறுப்பை இரட்டிப்பாக்குகிறது, நாங்கள் விளையாடும் போதெல்லாம், நாட்டிற்காக ஒரு பதக்கத்தை கொண்டு வர முயற்சிப்போம்" என்று கூறினார்.
இதையும் படிங்க:ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றார் அமன் ஷெராவத்.. இந்தியாவுக்கு 6-வது பதக்கம்! - Paris Olympics 2024