பார்படாஸ்: டி20 உலகக் கோப்பை தொடர் கடந்த ஜூன் 1ஆம் தேதி அமெரிக்கா, மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பார்படாஸில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதுகின்றன. பார்படாஸில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருவதால் இன்றும் மோசமான வானிலை நிலவுவதால் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணிகளுமே இந்த தொடரில் ஒரு தோல்விக்கூட அடையாமல் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த சூப்பர் 8 சுற்றில் குரூப் 1ல் இருந்து இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும், குரூப் 2ல் இருந்து இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளும் அரையிறுதிக்குள் நுழைந்தன.
முதல் அரையிறுதிப்போட்டியில் ஆப்கானிஸ்தானை வென்று தென் ஆப்பிரிக்கா அணியும், இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்தை வென்று இந்திய அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதனிடையே இன்று தொடங்கவுள்ள இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.