தர்மசாலா : இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. நான்கு ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில் அதில் 3-க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை (மார்ச்.7) தர்மசாலாவில் நடைபெறுகிறது.
தொடர் வெற்றி கண்டு வரும் இந்திய அணி, 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கண்ட வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்தை கைப்பற்றியது. இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் ஆஸ்திரேலிய அணியின் முதலிடம் கனவு சுக்குநூறாகும்.
இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சிறப்பாக உள்ளது. தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி வருகிறார். இந்திய அணி தனக்கு கிடைத்த வாய்ப்பை பொன்னாக மாற்றி உள்ளார் ஜெய்ஸ்வால். அதேநேரம் விராட் கோலிக்கு மாற்றாக களமிறக்கப்பட்ட ரஜத் படிதார் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதேபோல் கடந்த ஆடத்தில் விக்கெட் கீப்பர் துருவ் ஜூரலின் ஆட்டம் சிறப்பாக இருந்தது.
கோலிக்கு பதிலாக களமிறக்கப்பட்டு உள்ள ரஜத் படிதார் தனக்கு கிடைத்த வாய்ப்பை வீணாக்கி வருகிறார் என்றே கூறலாம். கடைசி ஆட்டத்தில் அவருக்கு பதிலாக தேவதுத் படிகல் களமிறக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. மற்றபடி சுப்மன் கில் நன்றாக விளையாடி வருகிறார். முதல் இன்னிங்ஸ்களில் சுப்மன் கில்லின் ஆட்டம் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லாவிட்டாலும் இரண்டாவது இன்னிங்ஸ்களில் திறம்பட விளையாடி வருகிறார்.
பந்துவீச்சை பொறுத்தவரை 4வது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு அளிக்கப்பட்ட ஜஸ்பிரீத் பும்ரா, இந்த ஆட்டத்தில் மீண்டும் அணிக்கு திரும்புகிறார். அதேபோல் சுழற்பந்து வீச்சை பொறுத்தவரை ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். கடந்த ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சில் சுழற்பந்து வீச்சாளர்களே அனைத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
தர்மசாலா ஆட்டம் தமிழக வீரர் அஸ்வினுக்கு 100வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியாகும். 100வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் களமிறங்கி ரவிச்சந்திரன் அஸ்வின் புது மைல்கல் படைக்க உள்ளார். அதேபோல் இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவ்க்கும் இது 100வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியாகும்.