பெங்களூரு:இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூரூவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 2வது நாள் போட்டி இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. பங்களதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி வாகை சூடிய இந்திய அணி, இந்த போட்டியையும் மிகுந்த நம்பிக்கையுடன் துவங்கியது.
மோசமான சாதனை:ஆனால் இந்திய அணிக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்களுக்கு அவுட்டாக, விராட் கோலி, சர்பராஸ்கான் ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் இந்திய அணி 10 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இருப்பினும் 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜெய்ஸ்வால்,ரிஷப் பண்ட் ஆகியோர் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இதில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 13 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். அதிரடி வீரர் ரிஷப் 20 ரன்களுக்கு விக்கெட் இழக்க, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கே.எல்.ராகுல், ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் டக் அவுட் ஆகி ஏமாற்றன் அளித்தனர்.