விசாகப்பட்டினம்:இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் மைதானத்தில், நேற்று முன்தினம் (பிப். 2) துவங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதல் இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணி 396 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதில் அதிரடியாக விளையாடிய இந்திய அணியின் இளம் வீரர் ஜெய்ஸ்வால் 209 ரன்கள் விளாசினார். இங்கிலாந்து அணி தரப்பில் ரெஹான் அகமது, ஜோரூட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, பும்ராவின் பந்து வீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாமல் அடுத்தடுத்தது விக்கெட்டுகளை இழந்து, 253 ரன்களுக்கு ஆவுட் ஆனது.
இங்கிலாந்து அணி தரப்பில், ஜேக் கிராலி 76 ரன்களும், கேப்டன் பென் ஸ்டோஸ் 47 ரன்களும் விளாசினர். இந்திய அணி தரப்பில், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 6 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் 143 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, ஆரம்பமே அதிர்ச்சி கொடுத்தது. அணியின் கேப்டன் ரோகித் சர்மா 13 ரன்களுக்கு வெளியேற, முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 17 ரன்களுக்கு வெளியேறினார். இதனால் 30 ரன்களுக்குள் இந்தியா 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.