ஐதராபாத்: 2024 மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - இந்தியா மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த போட்டியில் இந்திய வேகப் பந்துவீச்சாளர் அருந்ததி ரெட்டி ஐசிசி நடத்தை விதிகளை மீறி நடந்து கொண்டதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசிய அருந்ததி ரெட்டி 19 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. அருந்ததி ரெட்டி வீசிய 20வது ஓவரில் நிதா தார் ஆட்டமிழந்தார்.
அவரது விக்கெட்டை வீழ்த்திய பின் ஆக்ரோஷமாக அவரை வெளியேறுமாறு சைகை செய்தார் அருந்ததி ரெட்டி. ஐசிசி நடத்தை விதிகளின் படி இது விதி மீறல் ஆகும். ஒரு சர்வதேச போட்டியின் போது ஒரு வீரர் ஆட்டம் இழந்து செல்லும் போது அவரை இழிவுபடுத்தும் வகையிலோ, ஆக்ரோஷமான, எதிர்வினையை தூண்டக் கூடிய மொழி, செயல் அல்லது செய்கையைப் பயன்படுத்துதல் விதி மீறல் என ஐசிசி விதிகளில் கூறப்பட்டுள்ளது.