சென்னை:இந்தியா - இங்கிலாந்து இடையே டி20 தொடரின் இரண்டாவது போட்டி வரும் 25ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடக்கவுள்ளது. இதனால் இருநாட்டு வீரர்களும் விமான மூலம் இன்று சென்னை வந்தனர்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஐந்து டி20 கிரிக்கெட் போட்டி மற்றும் 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் 20 ஓவர் போட்டி நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவருக்கு 132 ரன்கள் அடித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 133 ரன் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஆரம்ப முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 13 வது ஓவரில் மூன்று விக்கெட்டுகள் இழந்து இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.
இதில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி வீரர் அபிஷேக் சர்மா 34 பந்துகளுக்கு 76 ரன்கள் எடுத்தார். இந்தியாவின் சுழர் பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி மூன்று விக்கெடுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
இதையும் படிங்க:என்னா அடி..! குருவின் சாதனையை முறியடித்த அபிஷேக் சர்மா... கதி கலங்கிய இங்கிலாந்து...!
இதையடுத்து இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் வரும் 25ஆம் தேதி இரவு 7 மணி அளவில் நடைபெற உள்ளது. இதற்காக சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியும், ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி வீரர்களும் விமான மூலம் கொல்கத்தாவில் இருந்து இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.
அவர்களை தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அலுவலர்கள் வரவேற்று சொகுசு பேருந்துகள் மூலம் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிக்கு அழைத்துச் சென்றனர்.
இதையடுத்து நாளை சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இரு நாட்டு கிரிக்கெட் அணி வீரர்களும் பயிற்சி மேற்கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. ஐந்து 20 ஓவர்கள் கொண்ட தொடரில் 1-0 என்ற நிலையில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. மேலும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து இரண்டாவது டி20 போட்டிக்கு டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு மெட்ரோ ரயிலில் இலவசம் பயணம் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.