சென்னை: இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையேயான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி இன்று (ஜூன் 29) இரவு இந்திய நேரப்படி 8 மணிக்கு பார்படாஸ் கேன்ஸிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் மழை குறுக்கிட அதிக வாய்ப்புள்ளது என கூறப்படும் நிலையில், இறுதி போட்டி என்பதால் ரத்தாகும் பட்சத்தில் நாளை (ஜூன் 30) ரிசர்வ் டேவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பை தொடர் கடந்த ஜூன் 1ஆம் தேதி அமெரிக்கா, மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா, தென் ஆப்பிரிக்கா இரு அணிகளும் இந்த தொடரில் தோல்வி அடையாமல் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. இந்தியா அணி ஆரம்பத்தில் அயர்லாந்து அணியுடனான போட்டியில் வெற்றியுடன் உலகக் கோப்பை பயணத்தை துவக்கியது. பின்னர் பாகிஸ்தான் உடனான த்ரில் போட்டியில் பும்ராவின் அபாரமான பந்துவீச்சால் வெற்றி பெற்றது.
இதனைதொடர்ந்து இத்தொடரில் கத்துக்குட்டியாக நுழைந்து பெரிய அணிகளை வென்ற அமெரிக்காவை எளிதாக வென்றது. பின்னர் கனடாவுடனான போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், சூப்பர் 8 சுற்றில் ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம், ஆஸ்திரேலியா ஆகிய அணிகளை எளிதாக வென்று அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொண்டது.
கடந்த 2022 தோல்விக்கு பழிதீர்க்கும் விதமாக இங்கிலாந்து அணியை அபாரமான பந்துவீச்சால் இந்தியா தோற்கடித்தது. அதேபோல் தென் ஆப்பிரிக்கா அணியும் தொடரின் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. லீக் போட்டிகளில் இலங்கை, நெதர்லாந்து ஆகிய அணிகளை எளிதாக வென்ற தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், நேபாளம் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் போராடி நூலிழையில் வென்றது. அதே நேரத்தில் சூப்பர் 8 சுற்று போட்டிகளில் அமெரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளை வென்று அரையிறுதியில் ஆஃப்கானிஸ்தானுடன் மோதியது.