புனே: இந்திய கிரிக்கெட் அணி புனேயில் நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் இங்கிலாந்தை 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 3-1 என முன்னிலை பெற்றுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தொடக்கத்தில் சில விக்கெட்டுகளை இழந்தாலும், அபிஷேக் சர்மா (29 ரன்) மற்றும் ரிங்கு சிங் (30 ரன்) ஆகியோர் அணியை சற்று நிதானமாக விளையாடி மீட்டனர். பின்னர், ஹர்திக் பாண்ட்யா 30 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 4 சிக்சர்களுடன் 53 ரன்கள், ஷிவம் துபே 34 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்களுடன் 53 ரன்கள் அடித்து அணியின் ரன்களை உயர்த்தினர்.
இங்கிலாந்து பந்துவீச்சாளர்களில் சாகிப் மக்மூத் 4 ஓவரில் 35 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள், ஜேமி ஓவர்டன் 4 ஓவரில் 32 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
அடுத்ததாக 182 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, தொடக்கத்தில் நன்றாக விளையாடிய போதிலும், இந்திய பந்துவீச்சாளர்களின் சிறப்பான ஆட்டத்தால் 19.4 ஓவரில் 166 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியின் ரவி பிஷ்னோய் 4 ஓவரில் 28 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள், வருண் சக்ரவர்த்தி 4 ஓவரில் 28 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள், அர்ஷ்தீப் சிங் 3.4 ஓவரில் 35 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
பேட்டிங் செய்யும் போது, ஷிவம் துபே தலையில் பந்து தாக்கியதால், அவருக்கு பதிலாக கன்கஷன் மாற்றாக ஹர்ஷித் ராணா களமிறங்கினார். இது அவரது முதல் சர்வதேச டி20 போட்டியாகும். அவர் 4 ஓவரில் 33 ரன்களுக்கு 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி, அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்தார்.
இந்த வெற்றியின் வாயிலாக, இந்திய அணி தொடரில் 3-1 என முன்னிலை பெற்றுள்ளது. அடுத்ததாக, மும்பையில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்திய இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.