சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டு டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. முதல் டெஸ்ட் தொடர் கடந்த செப் 19ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. இரண்டாவது டெஸ்ட் தொடர் வரும் செப்.27ம் தேதி கான்பூரில் நடைபெறுகிறது.
முதல் நாள் முடிவில், 6 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்களுடன் இந்திய அணி களத்தில் இருந்தது. பின்னர் இரண்டாம் நாள் முடிவில், இந்திய அணி 376 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது. அதன்பின் வங்கதேச அணி தனது இன்னிங்ஸை தொடங்கி 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதனைத்தொடர்ந்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி விளையாடியது. அதில், 23 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் எடுத்து, 308 ரன்கள் முன்னிலை வகித்தது.
இதையும் படிங்க :வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு.. சும்மன் கில், பண்ட் சதம் விளாசி அசத்தல்!
இந்நிலையில் இன்று(செப் 21) மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கியது. ரிஷப் பண்ட் - சுப்மன் கில் ஜோடி களமிறங்கியது. இந்திய அணி வீரர்கள் வங்கதேச அணியின் பந்துவீச்சை அதிரடியாக எதிர்க்கொண்டு விளையாடினர். ரிஷப் பண்ட் மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் சதம் விளாசினர். சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்டை மெஹிதி ஹசன் தனது அசத்தலான பந்து வீச்சில் அவுட் ஆக்கினார். பின்னர் ராகுல் களமிறங்கி சுப்மன் கில்லுக்கு கைகொடுத்தார். அதன்படி, இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 64 ஓவர்கள் முடிவில் 287 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது.
இதனைத் தொடர்ந்து 515 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது. தொடக்கத்தில், ஜாகிர் ஹசன் - ஷத்மான் இஸ்லாம் ஜோடி களமிறங்கி விளையாடியது. இருவரும் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ மட்டுமே அரை சதம் விளாசினார்.
இந்நிலையில் மூன்றாவது நாள் ஆட்டம் போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் வழக்கத்தை விட முன்கூட்டியே நிறுத்தப்பட்டது. மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேச அணி 37.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை குவித்து உள்ளது. வங்கதேச அணி வெற்றி பெற இன்னும் 357 ரன்கள் தேவையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.