ஐதராபாத்:பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டு தொடர் இந்தியாவுக்கு நினைத்தது போல் அமையவில்லை. 1 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா 71வது இடத்தை பிடித்தது. ஆனால் பாராலிம்பிஸ் விளையாட்டு தொடரில் இந்தியா எதிர்பார்த்ததை விட வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை வென்று குவித்தனர்.
பாராலிம்பிக்ஸ் விளையாட்டு தொடரில் மொத்தம் 84 இந்திய வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களை இந்திய வீரர் வீராங்கனைகள் அறுவடை செய்தனர். மேலும், எப்போதும் இல்லாத அளவில் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு தொடரில் அதிக பதக்கங்களை வென்று இந்தியா வரலாறு படைத்தது.
இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்ஸ் விளையாட்டு தொடரில் கலந்து கொண்டு நாடு திரும்பிய வீரர் வீராங்கனைகளுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த விழாவில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டு பதக்கம் வென்ற வீரர் வீராங்கனைகளுக்கு பரிசுகளை வென்று கவுரவித்தார்.
தங்கம் வென்றவர்களுக்கு ரூ.75 லட்சம்:
பாராலிம்பிக்ஸ் விளையாட்டு தொடரில் தங்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு தரப்பில் 75 லட்ச ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டடது. அதேபோல், வெள்ளி பதக்கம் வென்ற வீரர் வீராங்கனைகளுக்கு 50 லட்ச ரூபாயும், வெண்கலம் வென்றவர்களுக்கு 30 லட்ச ரூபாயும் பரிசாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.