ஜெய்ப்பூர்:ஐபிஎல் 2024 போட்டிகள் தொடங்கி, சென்னை உள்பட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நேற்று (ஏப் 10) ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் தொடரின் 24வது போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதன்படி, பேட்டிங்கில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக ரியான் பராக் 76 ரன்கள் குவித்தார். இதில், 5 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் அடங்கும். அதேபோல், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சாம்சன் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் அடித்து அரைசதம் கடந்து 68 ரன்கள் எடுத்தார். மேலும், ஜெய்ஸ்வால் 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதேநேரம், குஜராத் அணியின் உமேஷ், ரஷீத் கான் மற்றும் மொஹித் சர்மா தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர். இதனையடுத்து, 197 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் உள்பட அரைசதம் கடந்த நிலையில் 72 ரன்கள் எடுத்து அணிக்கு வலு சேர்த்தார்.