மும்பை:கிரிக்கெட் உலகின் தலைசிறந்த வீரர்களின் பட்டியலை எடுத்துக் கொண்டால் அதில் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் பெயரை தவிர்க்க முடியாது. ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதம், 100 சதங்கள் என சச்சின் தெண்டுல்கரின் பல்வேறு சாதனைகளை அடுக்கிக் கொண்டே சென்றாலும், அதற்கு அடித்தளம் அமைத்த தினம் இன்று தான்.
சச்சின் தெண்டுல்கர் தனது 17 வயதில் இன்று தான் தனது முதல் சர்வதேச சதத்தை விளாசினார். மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராப்போர்ட் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தனது முதல் சதத்தை சச்சின் தெண்டுல்கர் விளாசினார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த வீரர், டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்து இருந்தாலும் அது அனைத்திற்கும் இன்றைய நாள் தான் தொடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏறத்தாழ 34 ஆண்டுகளுக்கு முன்னர் கடந்த 1990ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடிய சச்சின் தெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை விளாசினார். அப்போது அவருக்கு வயது 17 ஆண்டுகள் 112 நாட்கள் மட்டுமே. மேலும் சாதனையின் மூலமே தனது முதல் சர்வதேச சதத்தை சச்சின் பூர்த்தி செய்தது கூடுதல் சுவாரஸ்யத்தக்க தகவலாகும்.
அந்த சதத்தை அடித்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் மிகக் குறைந்த வயதில் சதம் விளாசிய மூன்றாவது வீரர் என்ற சிறப்பையும் சச்சின் தெண்டுல்கர் பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த ஆட்டத்தில் சச்சினின் அடித்த சதம் இந்திய அணியையே காப்பாற்றக் கூடியதாக அமைந்து என்பது குறிப்பிடத்தக்கது.