ஐதராபாத்:கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் அணியின் வெள்ளைப் பந்து கிரிக்கெட் பார்மட்டின் தலைமைப் பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன் நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படியில் பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட கேரி கிர்ஸ்டன் 6 மாதங்களிலேயே தனது பதவியை ராஜினாமா செய்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
அடுத்த மாதம் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாட உள்ள நிலையில், கேரி கிர்ஸ்டன் பதவி விலகி இருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் ஜேசன் கில்லெஸ்பியை (Jason Gillespie) புதிய தலைமை பயிற்சியாளராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியமித்து உள்ளது.
இவரது பயிற்சியின் கீழ் தான் அண்மையில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை பாகிஸ்தான் அணி கைப்பற்றி வெற்றி வாகை சூடியது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் மோசமான ஆட்டத்தை தொடர்ந்து கேரி கிர்ஸ்டனின் பயிற்சி கடும் கேள்விக்குள்ளாக்கப்பட்டது.
காரணம், அவரது பயிற்சியில் பாகிஸ்தான் குரூப் ஸ்டேஜைத் தாண்டவில்லை என்பதே கசப்பான உண்மை. கேரி கிர்ஸ்டன் பெரிய வெற்றிகளைக் கண்ட ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் ஒரு போட்டியில் கூட பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக இல்லாமல் விலகியுள்ளார். அதேநேரம் கடந்த 2011ஆம் ஆண்டு இந்தியா ஒருநாள் உலகக் கோப்பையை தோனி தலைமையில் வென்ற போது கேரி கிர்ஸ்டன் தான் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.