ஐதராபாத்: ஆகஸ்ட் மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் ஆடவர் துப்பாக்கிச் சுடுதலில், மூன்று நிலை பிரிவில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசலே வெண்கலம் வென்றார். பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசலேவின் சொந்த மாநிலமான மகாராஷ்டிரா அரசு 2 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்தது.
மேலும் அவர் மத்திய ரயில்வே பணியாளராக பதவி உயர்வு பெற்று சிறப்புப் பணி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற தனது மகனுக்கு மகாராஷ்டிர அரசு 2 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியதற்கு அவரது தந்தை சுரேஷ் குசலே அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய சுரேஷ் குசலே, ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற தனது மகன் ஸ்வப்னில் குசலேவுக்கு 5 கோடி ரூபாய் பரிசுத் தொகை மற்றும் புனே, பலேவாடி பகுதியில் உள்ள சத்திரபதி சிவாஜி மகராஷ் விளையாட்டு மையத்தின் அருகே சொகுதி வீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு அரியானா அரசு அதிக தொகை பரிசாக வழங்குவதாகவும் மகாராஷ்டிர மாநில அரசு மிகக் குறைவாக வழங்கி உள்ளதாக அவர் தெரிவித்தார். அரியானா அரசு பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு 5 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்குகிறது என்றார்.