சென்னை:ஒரு நாட்டின் சட்டப்பூர்வமான அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டே அந்த நாட்டின் தேசிய விளையாட்டு என்று கருதப்படுகிறது. அவைகள் அந்த நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் நம்பிக்கையை பிரதிபலிப்பதோடு அந்த நாட்டு மக்களை அடையாளப்படுத்தவும் செய்கின்றன.
கடந்த 1975ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று சாதனை படைத்தது. மேலும், ஒலிம்பிக் ஹாக்கியில் அதிகம் தங்கம் வென்ற நாடு இந்தியாவாகும். தற்போது பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் மாகாணத்தில் 33வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டியில் இந்திய ஹாக்கி அணியினர் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதில், கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில் இந்திய அணி, கிரேட் பிரிட்டன் அணியை எதிர்கொண்டு விளையாடினர். அதில் 4-2 என்ற கணக்கில் இந்திய அணி அசத்தல் வெற்றியை பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
நேற்றைய தினம் (ஆகஸ்ட் 6) நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ஜெர்மனியை எதிர்கொண்ட இந்திய அணி போராடி தோல்வியை சந்தித்தது. இதனால், நாளை (ஆக. 8 ) நடைபெறவுள்ள வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய ஹாக்கி அணி ஸ்பெயின் ஹாக்கி அணியை சந்திக்க உள்ளது.
இந்நிலையில் இந்திய ஹாக்கி அணி அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்தது குறித்தும் நாளை நடைபெறும் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி குறித்தும் இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் வாடிப்பட்டி ராஜா ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார். அதில், "இந்திய ஹாக்கி அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும், ஒரு சில தவறுகளால் அரையிறுதிப் போட்டியில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது.
'இந்திய அணி செய்த தவறுகள்':கோல் அடிப்பதற்காக பந்தை பெனால்டி கார்னராக செலுத்துவதில் இந்திய ஹாக்கி அணி அதிகம் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்ய நம் வீரர்கள் தவறவிட்டனர். அரையிறுதிப் போட்டியில் இந்திய ஹாக்கி அணி வீரர் ஜர்மன் பிரீத் சிங் (Jarmanpreet Singh) டி-சர்கிளில் வந்த ஓவர்ஹட் பந்தை தடுத்ததால் பெனால்டி கார்னர் கொடுக்கப்பட்டது. அதனை ஜெர்மனி வீரர்கள் கோலாக மாற்றினர். அதுவே முதல் தவறாக இந்திய ஹாக்கி அணிக்கு அமைந்தது.
மற்றுமொரு இந்திய வீரர் அமித் ரெட் கார்ட் வாங்கியதால் அதுவும் நம் அணிக்கு பின்னடைவாக அமைந்தது. ரெட் கார்ட் வாங்கி வெளியேறியதால் deep Defender-ஆக சிறப்பாக செயல்படக்கூடிய வீரரை இழந்ததால், ஜெர்மனி வீரர்கள் இலகுவாக பந்தை கோலாக மாற்றிவிட்டனர்.
ஆட்டத்தின் இறுதியிலும் இந்திய அணிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பையும் அவர்கள் தவறவிட்டதால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெரும் வாய்ப்பை இழந்தது. இந்திய ஹாக்கி அணியினர் கடந்த போட்டிகளை விட இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.