ஹைதராபாத்: இந்திய அணியின் முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான அன்சுமான் கெய்க்வாட்டின் தந்தை தத்தாஜிராவ் கெய்க்வாட் இன்று (பிப்.13) காலமானார்.
1928ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27ஆம் தேதி குஜராத் மாநிலம் வதோதராவில் பிறந்தார் தத்தாஜிராவ் கெய்க்வாட். இவர் 1952ஆம் ஆண்டு முதல் 1961ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடினார்.
1952ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிராகத் தனது கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கினார். முதல் தர கிரிக்கெட்டில் அசத்திய இவரால் பெரிதாகச் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன்கள் சேர்க்க முடியவில்லை. கடைசியாக டெஸ்டில் 1961ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
11 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இவர் ஒரே ஒரு அரைசதம் உட்பட 350 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். அதே சமயம் அவர் விளையாடிய 110 முதல் தரப் போட்டிகளில் 5,788 ரன்கள் குவித்துள்ளார். அதில் 17 சதங்கள் மற்றும் 23 அரைசதங்களும் அடங்கும். அதிகபட்சமாக 249 ரன்கள் விளாசியுள்ளார்.
இந்த நிலையில், இன்று (பிப்.13) தத்தாஜிராவ் கெய்க்வாட் தனது 95வது வயதில் காலமானார். இவரது மறைவிற்கு கிரிக்கெட் வீரர்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் செய்தியைப் பதிவிட்டுள்ளது.
அதில், "இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மூத்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருமான தத்தாஜிராவ் கெய்க்வாட்டின் மறைவிற்கு பிசிசிஐ தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய தத்தாஜிராவ் கெய்க்வாட் 1959ஆம் ஆண்டு இந்தியாவின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது அணியை வழிநடத்தினார்.
அதே போல், அவரது தலைமையின் கீழ் பரோடா 1957-58 சீசனில் ரஞ்சி டிராபியை வென்றார். மேலும், தத்தாஜிராவ் கெய்க்வாட்டின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு வாரியம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது" எனப் பதிவிட்டிருந்தது.
இதையும் படிங்க:இந்தோனேசியாவில் மின்னல் தாக்கியதில் கால்பந்து வீரர் உயிரிழப்பு.. விளையாடிக் கொண்டிருந்தபோது விபரீதம்!