தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கிரிக்கெட்டில் புதிய விதி அறிமுகம்; சிக்ஸர் அடித்தால் இனி அவுட்! என்னடா இது பேட்ஸ்மேன்களுக்கு வந்த சோதனை? - six ban rule in club cricket - SIX BAN RULE IN CLUB CRICKET

six ban rule in club cricket: இங்கிலாந்தில் பிரபல கிரிக்கெட் கிளப் ஒன்று பேட்ஸ்மேன்கள் பந்தை சிக்ஸருக்கு அடித்தால் அவர்கள் 'அவுட்' என்ற புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளது. தெருமுனை கிரிக்கெட்டில் பின்பற்றப்படுவது போன்றுள்ள இவ்விதிமுறைக்கு கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

கிரிக்கெட் மைதானம்(சித்தரிப்புப் படம்)
கிரிக்கெட் மைதானம்(சித்தரிப்புப் படம்) (Credits - IANS)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 24, 2024, 5:26 PM IST

சசெக்ஸ்(இங்கிலாந்து): இங்கிலாந்து நாட்டில் 234 ஆண்டுகள் பழமைவாய்ந்த உள்ளூர் கிரிக்கெட் கிளப் என்ற பெருமையை 'சௌத்விக் அண்ட் ஷோர்ஹாம்' பெற்றுள்ளது. இந்த கிளப்பிற்கு சொந்தமான மைதானம் ஊருக்கு நடுவில் இருப்பதால் இந்த கிளப்பில் விளையாடும் வீரர்கள் சிக்‌ஸர்கள் அடிக்கும்போது அக்கம்பக்கத்தில் இருக்கும் வீடுகளின் ஜன்னல்கள், கார் கண்ணாடிகள் சேதமடைவதாக கிளப் நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் கிளப் நிர்வாகம் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

பேட்ஸ்மேன்கள் சிக்ஸர்களை அடிப்பதால் தானே இதுபோன்ற விளைவுகள் ஏற்படுகின்றன? என்று யோசித்து, இனி பேட்ஸ்மேன்கள் சிக்‌ஸர்கள் அடிக்காத வகையில் புதிய விதியை கிளப் நிர்வாகம் கொண்டு வந்துள்ளது. "பேட்ஸ்மேன்கள் முதல்முறை சிக்‌ஸர்கள் அடித்தால் ரன் எதுவும் இல்லை என்றும், இரண்டாவது முறை சிக்ஸர் அடித்தால் அவுட்" எனவும் இந்த விதிமுறை கூறுகிறது. இப்புதிய விதிமுறை, அந்த கிளப்பில் விளையாடும் வீரர்கள் மற்றும் போட்டியை காணவரும் பார்வையாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"பந்தை சிக்‌ஸருக்கு அடிப்பது கிரிக்கெட் ஆட்டத்தின் பெருமையின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. அதை எப்படி தடை செய்ய முடியும்? இந்த புதிய விதிமுறை கிரிக்கெட்டின் உயிரோட்டத்தை குறைக்கிறது" என கிளப்பின் முன்னாள் வீரர் ஒருவர் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். "கிரிக்கெட் ஆட்டத்தை ஆவலுடன் காணவரும் என்னை பொறுத்தவரை சிக்ஸர்களை தடை செய்வதில் உடன்பாடு இல்லை” என ரசிகர் ஒருவரும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழலில் உலக நாடுகள் அனைத்தும் பந்துகளை சிக்ஸர்களுக்கு பறக்கவிடும் டி20 போட்டிகள், அதிலும் சில நாடுகளில் டி10 தொடர்களும் நடத்தப்படும் சூழலில், சௌத்விக் கிளப்பில் சிக்ஸர்கள் விளாச தடை விதித்து கொண்டு வரப்பட்டுள்ள விதி, கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

80, 90ஸ் கிட்ஸ்கள் சிறுவயதில் தெருக்களில் கிரிக்கெட் விளையாடியபோது அக்கம் பக்கம் உள்ள வீடுகள் மீது பந்து விழாமலிருக்க, பேட்டிங் செய்யும் நபர்கள் பந்தை சிக்ஸருக்கு அடித்தால் அவுட் என்ற விதிமுறையை வைத்து விளையாடி வந்தனர். அதேபோன்ற விதிமுறை இங்கிலாந்து கிரிக்கெட் கிளப்பில் கொண்டு வரப்பட்டுள்ளதை விமர்சித்து சமூக வலைதளங்களில் கேலியும் கிண்டலுமாக கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: இந்திய கிரிக்கெட்டின் 'யார்க்கர் கிங்' நடராஜன் நெல்லையப்பர் கோயிலில் சாமி தரிசனம்! ரசிகர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ச்சி

ABOUT THE AUTHOR

...view details