ஹைதராபாத்: டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களை குவித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்துள்ளார் தினேஷ் கார்த்திக்.
ஐபிஎல் தொடரை போல தென்னாப்பிரிக்காவின் டி20 லீக்கில் டேவிட் மில்லர் தலைமையிலான பார்ல் ராயல்ஸ் அணிக்காக தினேஷ் கார்த்திக் (40) விளையாடி வருகிறார். இதனால் இந்த போட்டி இந்தியாவிலும் கவனிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஜனவரி 27 ஆம் தேதி அன்று பார்ல் ராயல்ஸ் மற்றும் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் இடையேயான போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது ஐந்தாவது வரிசையில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி விளாசினார். தொடர்ந்து ஆடிய தினேஷ் கார்த்திக் 15 பந்துகளில் 21 ரன்களை குவித்து இலக்கை எட்ட செய்தார்.
இதனால் பார்ல் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், தினேஷ் கார்த்திக்கின் 21 ரன்னில் புதிய சாதனையும் பதிவு செய்தார். டி20 தொடரில் இந்தியாவின் விக்கட் கீப்பர் என்ற முறையில் முன்னாள் கேப்டன் தோனி எடுத்திருந்த 7,432 ரன்களை கடந்து 7,451 ரன்களை தினேஷ் கார்த்திக் பதிவு செய்தார். தற்போது இவர் 361 இன்னிங்ஸ்களில் (409 போட்டிகள்) 26.99 சராசரியுடன் 136.84 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 7,451 ரன்களை எடுத்துள்ளார்.
இதையும் படிங்க:"அடுத்த பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே இலக்கு" - அர்ஜுனா விருது பெற்ற மனிஷா ராமதாஸ்!