சென்னை: மகேந்திர சிங் தோனி ஜூலை 7, 1981ஆம் ஆண்டு பீகார் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் பிறந்தார். இவரது பள்ளிப்படிப்பை ராஞ்சியில் உள்ள டிஏவி ஜவஹர் வித்யா மந்திரில் பயின்றார். இவர் தனது பள்ளிப்பருவத்தில் பூப்பந்து மற்றும் கால்பந்தில் சிறந்து விளங்கினார்.
கிரிக்கெட் பயணம் தொடங்கிய தருணம்: இவர் தனது பள்ளி கால்பந்து அணிக்காக கோல் கீப்பராக செயல்பட்டார். பின்னர் கால்பந்து பயிற்சியாளர் உந்துதலின் பேரில் உள்ளூர் கிரிக்கெட் கிளப் ஒன்றுக்காக கிரிக்கெட் பயிற்சிக்கு அனுப்பப்பட்டார். அங்கு தனது அசாத்தியமான விக்கெட் கீப்பிங் திறமையால் ஈர்க்கப்பட்டார். இதையடுத்து கமாண்டோ கிரிக்கெட் கிளப்பில் விக்கெட் கீப்பராக தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். பின்னர் 1997ல் 16 வயதுக்குட்பட்ட வினே மன்கட் டிராபி சாம்பியன்ஷிப் தொடருக்கான தேர்ந்தெடுக்கப்பட்டு அதிலும் தனது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினார். இந்நிலையில் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக காரக்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக சிறிது காலம் பணியாற்றினார்.
இந்தியாவிற்காக அறிமுகம்: தோனி தனது 18 வயதில் பீகார் அணிக்கான ரஞ்சி கோப்பையில்(1999-2000) அறிமுகமானார். தனது அறிமுகப் போட்டியிலேயே அசாம் அணிக்கு எதிராக அரைசதம் அடித்து அசத்தினார். ரஞ்சி கோப்பையில் இவரது அசத்தலான செயல்பாட்டின் அடிப்படையில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். 2004ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக ஒருநாள் போட்டியிலும், 2005ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டிலும், 2006ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டிலும் அறிமுகமானார்.
3 ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன்:பின்னர் 2007ல் உலகக்கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணியின் கேப்டனாக தோனி தேர்வு செய்யப்பட்டார். அவர் கேப்டனாக அறிமுகமான முதல் தொடரிலேயே இந்திய அணியை டி20 உலகச் சாம்பியனாக மாற்றினார்.தொடர்ந்து இந்திய அணிக்கு கேப்டனாக தனது சிறந்த பங்களிப்பை அளித்து வந்த தோனி 2011-ல் இந்திய அணியை 50 ஓவர் உலகக்கோப்பைக்கு அழைத்துச் சென்றார். அந்த தொடரில் இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியில், 91 ரன்கள் குவித்து இந்தியா கோப்பையை (World Cup Cricket) வெல்வதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். அடுத்ததாக, இவர் தலைமையில் 2013-ல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியையும் இந்திய அணி வென்றது. கிரிக்கெட் வரலாற்றிலே மூன்று ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்த ஒரே கேப்டனாக தோனி திகழ்கிறார்.