ஐதராபாத்:2023ஆம் ஆண்டு உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு பின்னர் ஏறத்தாழ ஓராண்டாக இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை காண முடியவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு இறுதியில் அவர் இந்திய அணியுடன் இணைவார் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் முகமது ஷமி இடம் பெறுவார் என தெரிகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இருந்து மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ள நிலையில், முகமது ஷமியின் அணிக்கு கூடுதல் பலத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பேசிய பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, "இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்ய தயாராக உள்ளது. பும்ராவுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுக்க முடிவு செய்துள்ளோம். ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டோர் உடல் தகுதியுடன் உள்ளனர். பந்துவீச்சு ஜாம்பவான் முகமது ஷமி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணத்தில் இடம் பெறுவார். அணிக்கு அவர் தேவை, அவர் பொருத்தமாக இருப்பார் என்று நாங்கள் நினைக்கிறோம் " என்று கூறினார்.
அதேபோல் பிசிசிஐ தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர், வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விளையாடுவார் எனத் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் சினேஷிஷ் கங்குலி, முதலில் ரஞ்சிக் கோப்பையில் விளையாடி ஷமி தனது உடல் தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.