செயின்ட் லுசியா:9வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. குரூப் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில் அதில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின.
தற்போது சூப்பர் 8 சுற்றும் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில், இதுவரை தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரைஇறுதி வாய்ப்பை உறுதி செய்து உள்ளன. அரை இறுதிக்கு தகுதி பெறும் மற்ற இரண்டு அணிகளில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், இன்று (ஜூன்.24) செயின்ட் லுசியாவில் நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் இந்திய அணி நேரடியாக அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெறும். அதேநேரம் தோல்வி அடையும் பட்சத்தில் ரன் ரேட் அடிப்படையில் அரை இறுதி வாய்ப்பை தக்கவைக்கும்.
இதில், நாளை (ஜூன்.25) நடைபெற உள்ள ஆப்கானிஸ்தான் - வங்கதேசம் அணிகள் இடையிலான ஆட்டத்தின் முடிவும் இந்திய அணியின் அரை இறுதி வாய்ப்பை பிரதிபலிக்கும். ஒருவேளை ஆஸ்திரேலிய அணியிடம் இந்தியா தோற்று, நாளை நடைபெறும் இறுதி சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்தியாவின் அரை இறுதி கனவு கலையக் கூடும்.