சென்னை:டி20 உலகக் கோப்பை 2024ஆம் ஆண்டு தொடர் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. முதல்முறையாக இந்த உலகக் கோப்பையில் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட அணிகளைச் சேர்த்து 20 அணிகள் பங்கேற்கின்றன. லீக் சுற்றின் முதல் போட்டி நாளை (ஜூன் 2) நடைபெறும் நிலையில், இன்று இந்தியா, வங்கதேசம் அணிகள் பயிற்சி போட்டியில் மோதுகின்றன.
டி20 உலகக் கோப்பை கடந்த 2007ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை எட்டு டி20 உலகக் கோப்பை தொடர்கள் நடைபெற்றுள்ளது. அதில் வெஸ்ட் இண்டீஸ் (2012, 2016) இங்கிலாந்து (2010, 2022) அணி 2 முறையும், இந்தியா (2007), பாகிஸ்தான் (2009), இலங்கை (2014), ஆஸ்திரேலியா (2021) ஆகிய அணிகள் தலா ஒரு முறையும் வென்றுள்ளன.
2007 டி20 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. பாகிஸ்தானுக்கு எதிராக டையான போட்டியில் வெற்றி பெற்றது, யுவராஜ் ஃபிளிண்டாப் மோதல், யுவராஜ் ஒரே ஓவரில் 6 சிக்சர், அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுடன் ஸ்ரீசாந்தின் எழுச்சி, பாகிஸ்தானுடனான விறுவிறுப்பான ஃபைனல் வெற்றி என தோனியின் தலைமைக்கு முதல் சாதனையாக விளங்கின.
ஏனென்றால், 2007இல் அதற்கு முன்னதாக நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்தியா படுதோல்வி அடைந்து முதல் சுற்றிலேயே வெளியேறியது. இதற்கடுத்து நடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பை அணியில் சீனியர்கள் சச்சின், கங்குலி, சேவாக் என எவரும் இன்றி அணி அறிவிக்கப்பட்டது. அப்போது முன்னாள் வீரர்கள் முதல் ரசிகர்கள் என அனைவரும் இந்த முடிவை விமர்சனம் செய்தனர். இந்த இளம் வீரர்கள் அடங்கிய அணி முதல் சுற்றைக்கூட தாண்டாது, தோனிக்கு கேப்டனாக என்ன தகுதி இருக்கிறது என பல கல்லடிகளைப் பெற்றது.
ஆனால், அனைவரும் மூக்கில் விரல் வைத்தார் போல் இந்திய அணி சாதித்துக் காட்டியது. அதற்கு பின் இந்திய அணி 2009, 2010, 2012 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கோப்பையில் சூப்பர் 8 சுற்றோடு வெளியேறியது. பின்னர், 2014இல் இந்தியா ஃபைனல் வரை முன்னேறி இலங்கையிடம் தோல்வி அடைந்தது.
இதனையடுத்து, 2021 குரூப் சுற்றில் வெளியேறிய இந்திய அணி, 2022 அரையிறுதி வரை முன்னேறியது. இந்நிலையில், இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் நாளை (ஜூன் 2) தொடங்கவுள்ள நிலையில், இந்தியா சற்று சுமாரான அணியாகவே உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ரோகித் சர்மா தலைமையில் கோலி, பாண்டியா, ஜடேஜா, பும்ரா என அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ள போதும், பல்வேறு இளம் வீரர் தேர்வை ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நடராஜன், சாய் சுதர்சன், ரிங்கு சிங் ஆகியோரை 15 பேர் கொண்ட அணியில் சேர்க்காதது ஏமாற்றம் அளிப்பதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். அதேநேரத்தில் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸில் பிட்ச்கள் மெதுவாக இருக்கும் என்பதால் அர்ஷ்தீப், சிராஜ் ஆகியோருக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லீக் சுற்றில் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா போன்ற அணிகளை எதிர்கொள்ளும் போது உண்மையான சவால் காத்திருக்கும். எனினும், 2007-க்குப் பின் இந்திய அணிக்கு டி20 உலகக்கோப்பை எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. இந்த முறை இந்திய அணி சாதனை நிகழ்த்தும் என ரசிகர்கள் நம்பிக்கையில் உள்ளனர்.
இதையும் படிங்க:இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்? - பிசிசிஐ அப்டேட்! - Who Next Coach Of Indian Cricket