ஐதராபாத்: நடப்பாண்டுக்கான பிக் பாஷ் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடப் போவதில்லை என ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷீத் கான் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 2023-24 பிக் பாஷ் லீக் சீசனில் ரஷீத் கான் விளையாடவில்லை. ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கு பெண்களுக்கு எதிராக அட்டூழியங்கள் நிகழ்த்தப்படுவதாக கூறி அந்நாட்டுக்கு எதிரான கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலியா புறக்கணித்தது.
இதையடுத்து, கடந்த பிக் பாஷ் லீக் சீசனில் விளையாடப் போவதில்லை என்று ரஷீத் கான் தெரிவித்தார். இருப்பினும், தனது முடிவை மாற்றிக் கொண்ட ரஷீத் கான், பின்னர் பிக் பாஷ் லீக்கில் விளையாடுவதற்கான வீரர்கள் பட்டியலில் தனது பெயரை பதிவு செய்தார். ஆனாலும், முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் அந்த சீசனில் கலந்து கொள்ள முடியாமல் போனது.
இந்நிலையில், நடப்பாண்டுக்கான பிக் பாஷ் லீக் கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் தொடங்குகிறது. இந்நிலையில், நடப்பு பிக் பாஷ் லீக் சீசனிலும் ரஷீத் கான் பங்கேற்கப் போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ 20 லீக் தொடரில் எம்ஐ கேப் டவுன் அணிக்காக ரஷீத் கான் விளையாடி வருகிறார்.