துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டி20 வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஆல் ரவுண்டர் பிரிவில் ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் முகமது நபி முதலிடம் பிடித்தார். வங்கதேசம் அணியின் நட்சத்திர வீரர் ஷகிப் அல் ஹசனை பின்னுக்குத் தள்ளி முகமது நபி முதல் முறையாக முதலிடத்தை பிடித்தார்.
நடப்பு 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. குருப் பிரிவு லீக் ஆட்டத்தில் உகாண்டா மாற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் அடுத்தடுத்து வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும் முனைப்பில் உள்ளது.
இதில் நியூசிலாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து ஆல்ரவுண்டர் தரவரிசையில் அடுத்தடுத்து இரண்டு இடங்கள் முன்னேறி முகமது நபி முதல் இடத்தை பிடித்தார். அதேபோல் ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 3 இடங்கள் முன்னேறி இரண்டாவது இடத்தை பிடித்தார்.
நம்பர் ஒன் வீரராக வளம் வந்த வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன் 5வது இடத்திற்கு தள்ளப்பட்டார். அதேபோல் டி20 கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 1 இடம் முன்னேறி மூன்றாவது இடத்தை பிடித்தார்.