மயிலாடுதுறை:ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் மஹாளய அமாவாசை உள்ளிட்ட முக்கிய நாட்களில் நீர் நிலைகளில் நீராடி முன்னோர்களுக்கு கர்ம பூஜை செய்து தர்ப்பணம் அளிப்பது நன்மை பயக்கும் என்பது இந்து மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டம் காவிரி ஆறு, காசிக்கு நிகராக காவிரி துலாக்கட்டமாக திகழ்கிறது. உலக புகழ்பெற்ற இந்த காவிரி துலாக் கட்டத்தில் இந்து மக்கள் ஐப்பசி மாதம் முழுவதும் நீராடி தங்களது பாவச் சுமைகளை போக்கிக் கொண்டு, புனிதமடைந்ததாக வரலாறு கூறுகின்றன.
இந்த ஆற்றின் நடுவே 16 தீர்த்த கிணறுகள் உள்ளன. எனவே, இங்கு தை அமாவாசை அன்று பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து பலிகர்ம பூஜைகள் செய்து முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தனை செய்து, அவர்களது ஆசியை பெறத் தர்ப்பணம் செய்வது வழக்கம்.
பலிகர்ம பூஜைகள் மற்றும் தர்ப்பணம் (ETV Bharat Tamil Nadu) அதன்படி இன்று (ஜன.29) தை அமாவாசையை முன்னிட்டு புகழ் பெற்ற காவிரி துலாக்கட்ட கரையில் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து ஏராளமான பொதுமக்கள் அதிகாலை முதலே வருகை தந்த வண்ணம் இருந்தனர்.
இதையும் படிங்க:தொட்டதெல்லாம் துலங்கும் தை அமாவாசை நாளின் சிறப்புகள் என்ன?
இறந்த முன்னோர்களுக்குத் தேங்காய், வாழைப்பழம், கருப்பு எள் மற்றும் புஷ்பம், கீரை வகைகள், பச்சரிசி, பழங்கள், காய்கறிகள் ஆகியவை கொண்டு சிறப்புப் பூஜைகள் செய்து அதை காவிரி ஆற்றில் கொண்டு சென்று மறைந்த முன்னோர்கள் பெயர்களை உச்சரித்தவாறு தர்ப்பணம் செய்தனர். அதைத் தொடர்ந்து தர்ப்பணம் செய்த பொருட்களை காவிரி ஆற்றில் கரைத்து வழிபட்டனர். ஆண்டுதோறும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் இந்த காவிரிக்கரையில் இந்த ஆண்டு குறைந்த அளவே கூட்டம் காணப்பட்டது.