தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் மகாமகம் தொடர்புடைய 12 சைவத்தலங்களில் ஒன்றான சௌந்தரநாயகி சமேத கௌதமேஸ்வரசுவாமி கோயிலில், மரத்தேர் சிதலமடைந்து பல ஆண்டுகள் கடந்து விட்டதால், புதிய மரத்தேர் அமைக்க வேண்டும் என கும்பகோணம் பகுதி மக்கள் அறநிலையத்துறைக்கு நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்பின், அறநிலையத்துறை சார்பில் 27 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தேர் உருவாக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு அரும்பாவூர் வாசு தலைமையில் 15க்கும் மேற்பட்ட சிற்பிகள் கொண்ட குழுவினரால், இலுப்பை மரத்தில் புதிய மரத்தேர் அமைக்கும் பணி தொடங்கி, ஒரு ஆண்டாக நடைபெற்ற நிலையில், 10 அடி நீளம், 10 அடி அகலம், 11.5 அடி உயரத்தில் 21 டன் எடையில் பிரத்யேகமாக, திருச்சி பெல் நிறுவனத்தில் இருந்து 13.5 அடி நீள அச்சில், 5 அடி உயரம் கொண்ட 4 பெரிய இரும்பு சக்கரங்களுடன் புதிய மரத்தேர் உருவானது.
இதனை அடுத்து, இப்புதிய மரத்தேரின் வெள்ளோட்டம் இன்று (பிப்.7) மயிலாடுதுறை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. கோயில் வளாகத்தில் புனித நீர் நிரப்பிய கடத்தை ஸ்தாபித்து சிறப்பு ஹோமம் வளர்த்து, அதன் பூர்ணாஹுதிக்குப் பிறகு மகா தீபாராதனை செய்யப்பட்டது. பின், புனிதநீர் கடத்தை தேருக்கு எழுந்தருளச் செய்யப்பட்டது.