தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / spiritual

"அண்ணாமலையாருக்கு அரோகரா" - திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் முழு விவரம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் கார்த்திகை மகா தீபத்திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சிறப்பு ஏற்பாடுகள் குறித்த செய்தி தொகுப்பு.

திருவண்ணாமலை மகா தீபம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

திருவண்ணாமலை: நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும், பஞ்சபூத அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடி திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீபத்திருவிழா டிசம்பர் 4ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்றுவருகிறது.

இந்த நிலையில், இந்த விழாவின் சிகர நிகழ்வான கார்த்திகை மகா தீபத்திருவிழா நாளை (டிச.13) கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கம்.

அதன் அடிப்படையில், இந்த ஆண்டிற்கான கார்த்திகை மகா தீபத்திருவிழாவை முன்னிட்டு நாளை (டிச.13) அதிகாலை 4 மணியளவில் கோயில் மூலவர் சன்னிதியில் பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து, மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயரத்தில் மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் கார் பார்க்கிங்:

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் (ETV Bharat TamilNadu)

திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபத்தை முன்னிட்டு இன்று (டிச.12) முதல் 15ஆம் தேதி வரை போக்குவரத்து நெரிசல் ஏதுமின்றி பக்தர்கள் வந்து கிரிவலம் செல்ல ஏதுவாக 25 தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் 116 கார் பார்க்கிங் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை மக்கள் அறிந்து, அவற்றை முறையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பக்தர்கள் தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் கார் பார்க்கிங் இடங்கள் தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட காவல் துறை WhatsApp உதவி எண் 9363622330 -ற்கு Message மூலம் தொடர்பு கொண்டு Google Map Link-ஐ பெற்று கூகுள் மேப் (Google Map) உதவியுடன் அந்தந்த கார் பார்க்கிங் இடங்களுக்கு செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதவி எண்கள்: பக்தர்கள் உதவிக்கு அருகிலுள்ள May I Help You Booth / காவல் உதவி மையத்தை அணுகலாம். கீழ்காணும் அலைபேசி எண்களுக்கும் தொடர்பு கொள்ளலாம். இந்த உதவி எண்கள் டிச 12 (07:00 AM) முதல் டிச 15 (06:00PM) வரை 24 மணி நேரமும் செயல்படும் என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வ.எண் உதவி மையங்கள் உதவி எண்கள்
1 திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு காவல் நிலையம் 04175-222303
2 உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் 9498100431
3 அவசர உதவி எண் 100
4 மாவட்ட காவல் கட்டுப்பாட்டு எண் 9159616263

மதுக்கடைகள் மூடல்:

திருவண்ணாமலை வட்டம் மற்றும் நகரம், அருணாசவேஸ்வரர் திருக்கோயில் 2024ஆம் ஆண்டு திருகார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை நகரப் பகுதிக்கு அருகாமையில், மணலூர்பேட்டை சாலையில் இயங்கி வரும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடை எண்: 9261; காமராஜர் சிலை அருகில், திருமஞ்சன கோபுர வீதியில் இயங்கி வரும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடை எண்: 9481; வசந்தம் நகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் இயங்கி வரும் கடை எண்: 9490 ஆகிய 3 அரசு டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளும், இன்று (டிச.12) காலை 12.00 மணி முதல் 14ஆம் தேதி அன்று இரவு 10.00 வரை 3 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தேர் பவனி (ETV Bharat TamilNadu)

மேலும், திருவண்ணாமலை நகரத்தின் உள்பகுதியில் இயங்கிவரும் மதுபானக்கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் (எப்எல்3), ஹோட்டல் நளா, ஹோட்டல் அஷ்ரேய்யா, ஹோட்டல் அம்மாயி மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அங்காடி, வேங்கிக்கால் (எப்எல் 4A) ஆகிய உரிமம் பெற்ற மதுபானக்கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் இன்று (டிச.12) காலை 10.00 மணி முதல் 14ஆம் தேதி அன்று இரவு 10.00 வரை 3 நாட்களுக்கும் மது விற்பனை நடைபெறாமல் மூடி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

சிறப்பு பேருந்துகள்: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போகுவரத்து கழகம் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில், இன்று (டிச.12) முதல் 15ஆம் தேதி வரை சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் சேலம், வேலூர், காஞ்சிபுரம், புதுச்சேரி, கும்பகோணம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி மற்றும் பிற இடங்களிலிருந்தும் திருவண்ணாமலைக்கு சென்று வர ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

தேதி

சென்னை - திருவண்ணாமலை

பேருந்துகளின் எண்ணிக்கை

வேறு மாவடங்களிலிருந்து – திருவண்ணாமலை

பேருந்துகளின் எண்ணிக்கை

12/12/2024 269 948
13/12/2024 643 3689
14/12/2024 801 2543
15/12/2024 269 947

பேருந்துகளின்

மொத்த எண்ணிக்கை

1982 8127

மேலும், தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கு www.tnstc.in மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் பிரத்யேக செயலி (TNSTC official App) ஆகிய இணையதளங்களின் மூலமாக இருபுறமும் (up and down journey) முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

சிறப்பு ரயில்கள்:

அண்ணாமலையார் கோயில் (ETV Bharat TamilNadu)

கூட்ட நெரிசலை தடுக்கும் பொருட்டு தெற்குரயில்வே சிறப்பு ரயில் சேவைகளை அறிவித்துள்ளது.

  • ரயில் எண் 06130:விழுப்புரம் - திருவண்ணாமலை மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில், விழுப்புரத்தில் இருந்து டிசம்பர் 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் காலை 09.25 மணிக்குப் புறப்பட்டு, அதே நாளில் காலை 11.10 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடையும். திரும்பும் திசையில் ரயில் எண். 06129 திருவண்ணாமலை - விழுப்புரம் எக்ஸ்பிரஸ் திருவண்ணாமலையில் இருந்து டிசம்பர் 13, 14 & 15, ஆகிய தேதிகளில் மதியம் 12.40 மணிக்குப் புறப்பட்டு, அதே நாளில் மதியம் 2.15 மணிக்கு விழுப்புரத்தை சென்றடையும்.
  • ரயில் எண் 06145:விழுப்புரம் - திருவண்ணாமலை எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்: டிசம்பர் 12, 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் இருந்து இரவு 9.15 மணிக்குப் புறப்பட்டு இரவு 10.45 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். திரும்பும் திசையில் ரயில் எண். 06146 திருவண்ணாமலை - விழுப்புரம் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் திருவண்ணாமலையில் இருந்து டிசம்பர் 13, 14, 15, 16 ஆகிய தேதிகளில் பிற்பகல் 03.30 மணிக்குப் புறப்பட்டு, மாலை 05.00 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.
  • ரயில் எண் 06147: திருச்சிராப்பள்ளி வேலூர் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்: திருச்சிராப்பள்ளியில் இருந்து டிசம்பர் 13, 2024 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 08.00 மணிக்குப் புறப்பட்டு, மதியம் 2.50 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட்டை சென்றடையும். திரும்பும் திசையில் ரயில் எண். 06148 வேலூர் கண்டோன்மென்ட் திருச்சிராப்பள்ளி விரைவு சிறப்பு ரயில் 2024 டிசம்பர் 13 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 11.00 மணிக்கு வேலூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 07.20 மணிக்கு திருச்சிராப்பள்ளியை சென்றடையும்.

மண் சரிவும் எச்சரிக்கையும்:

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தேர் (ETV Bharat TamilNadu)

இதற்கு முந்தைய ஆண்டு மலையேற 2500 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு மண் சரிவு ஏற்பட்டு ஏழு பேர் இறந்த துயர சம்பவம் வருத்தம் அளிக்கிறது, இது தொடர்பாக புவியியல் மற்றும் சுரங்கத் துறை தொழில் நுட்ப வல்லுநர் குழு எட்டு பேர் மலையில் ஆய்வு நடத்தினர்.

அதன் அடிப்படையில் ஈரப்பதம், பாறை உருளும் தன்மை, மண் சரிவு உள்ளிட்ட காரணங்களால் நடக்கும் பாதையில் வழுக்கும் என்பதால் பக்தர்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை எடுத்துள்ளனர். எனவே, இந்த ஆண்டு மலையேற தீபம் ஏற்றும் பணியாளர்களை தேவையான எண்ணிக்கை மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு உதவும் வகையில் மருத்துவ குழு, தீயணைப்புத் துறையினர், வனத்துறையினர் உடன் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க
  1. “திருவண்ணாமலை அடிவார பகுதி வாழ்வதற்கு பாதுகாப்பான இடமா?”- ஐஐடி பேராசிரியர் விளக்கம்!
  2. நள்ளிரவில் அணையைத் திறந்து பேரழிவை ஏற்படுத்தியது யார்? விசாரணை கோரும் இராமதாசு
  3. திருச்சி மலைக்கோட்டை கார்த்திகை தீபத் திருவிழா: மெகா சைஸ் திரி கொப்பறையில் ஏற்றப்பட்டது!

இதுமட்டும் அல்லாது, மலையில் தீபம் ஏற்றுபவர்கள் நடந்து செல்லும் வழக்கமான இரண்டு பாதையில் ஒரு பாதை உறுதித் தன்மையோடு உள்ளதால், அந்த வழியை மட்டுமே அவர்கள் சென்று வர பயன்படுத்த வேண்டும், மலையை சுற்றி உள்ள பகுதிகளிலிருந்து மலையேற வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மலை ஏற அனுமதி மறுப்பு:

திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றும் பணியில் ஈடுபடுவோர் மட்டுமே மலையில் ஏற அனுமதிக்கப்படுவார்கள் என்றும், பக்தர்களுக்கு மலை ஏற அனுமதி இல்லை என்றும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவித்துள்ளார்.

போக்குவரத்து மாற்றம்:

அதேபோல, திருவண்ணாமலை மகா தீபத்திருநாளையொட்டி திருவண்ணாமலை நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நாளை (டிச.12) முதல் 15ஆம் தேதி வரை பெங்களூரு, கிருஷ்ணகிரி, சித்தூர், வேலூர் மற்றும் காஞ்சிபுரத்தில் இருந்து விழுப்புரம், கடலூர், புதுச்சேரி நோக்கிச் செல்லும் கனரக மற்றும் இலகு ரக வாகனங்கள் மற்றும் ஆற்காடு - திமிரி - ஆரணி - திருவண்ணாமலை மற்றும் ஆற்காடு - கண்ணமங்கலம் - திருவண்ணாமலை வழியாக செல்லும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.

இதற்கு மாறாக, அனைத்து வாகனங்களும் ஆற்காடு- செய்யாறு - வந்தவாசி - திண்டிவனம் வழியாக செல்ல அறிவுறுத்தப்படுகிறது. இதுமட்டும் அல்லாது, தீபத் திருவிழாவிற்கு பக்தர்கள் செல்லும் இலகு ரக வாகனங்கள் மட்டும் வழக்கமாக செல்லும் வழித்தடத்திலேயே அனுமதிக்கப்படும் என்று ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

காடாத்துணி சிறப்பு பூஜைகள்:

மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் 1500 மீட்டர் நீளம் உடைய காடாத்துணியை நேற்று (டிச.11) அண்ணாமலையார் திருக்கோயிலை சுற்றி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, மூன்றாம் பிரகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதி முன்பு வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

மலை உச்சிக்கு செல்லும் தீப கொப்பரை:

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும் பஞ்ச லோகத்தால் செய்யப்பட்டு, அர்த்தநாரீஸ்வரர் உருவம் பதித்த, 6.5 அடி உயரமுள்ள தீப கொப்பரைக்கு அண்ணாமலையார் திருக்கோயிலின் கிளி கோபுரம் அருகில் சிறப்பு பூஜை செய்து மலை உச்சிக்கு கொண்டு செல்லும் பணி துவங்கியது.

மேலும், கொப்பரையை மலை உச்சிக்கு கொண்டு செல்லும் போது பக்தர்கள் மற்றும் திருக்கோயில் ஊழியர்கள், "அண்ணாமலையாருக்கு அரோகரா... அண்ணாமலையாருக்கு அரோகரா..." என பக்தியுடன் தீப கொப்பரையை சுமந்து சென்றனர்.

40 லட்சம் பக்தர்கள்:

இந்த ஆண்டு தீபத்திருவிழாவை தரிசனம் செய்ய சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகைதர வாய்ப்பு இருக்கும் என்பதால், அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளில் தனி கவனம் செலுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details