தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / spiritual

பத்ர தீப திருவிழா: பத்தாயிரம் விளக்குகளால் ஜொலித்த நெல்லையப்பர் கோயில்! - NELLAIYAPPAR TEMPLE

நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் தை அமாவாசை பத்ர தீபத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அப்போது, கோயில் வளாகம் முழுவதும் தீப ஒளியில் ஜொலித்தது.

நெல்லையப்பர் கோயிலில் பெண்கள் விளக்கேற்றும் காட்சி
நெல்லையப்பர் கோயிலில் பெண்கள் விளக்கேற்றும் காட்சி (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 30, 2025, 1:18 PM IST

திருநெல்வேலி: தென்மாவட்டங்களில் சிறப்பு வாய்ந்த திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாகும். இங்கு சுவாமி, அம்பாளுக்கு என தனித்தனி சன்னதிகள் அமைந்துள்ளன. சிறப்புகள் வாய்ந்த அருள்மிகு காந்திமதி உடனுறை நெல்லையப்பர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் தை அமாவாசையை முன்னிட்டு புகழ்பெற்ற பத்ர தீபத் திருவிழா 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு பத்ர தீப திருவிழா துவங்கி, நடைபெற்று வருகின்றது.

பத்ர தீபத்துக்கு முந்தைய தினம் தங்கத் தீபம் ஏற்றப்படுவது சிறப்பு வாய்த்ததாகும். அதன்படி நேற்று முன்தினம் இரவு (ஜன.28) சுவாமி கோயில் மணி மண்டபத்தில் தங்க விளக்கு தீபம் ஏற்றும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

அப்போது, சுவாமி சன்னதி மகா மண்டபத்தில் கும்ப பூஜை, ஹோமம் ருத்ரஜப பாராயணம் நடைபெற்று பூா்ணாகுதி நடைபெற்றது. மேலும், அம்பாள் கோயிலில் அமைந்துள்ள ஊஞ்சல் மண்டபத்தில் அன்னை காந்திமதி உடனுறை சுவாமி நெல்லையப்பருக்கு அபிஷேக ஆராதனைகள் மற்றும் தங்க விளக்கு ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கோயிலில் விளக்கேற்றும் காட்சி (ETV Bharat Tamil Nadu)

அதைத் தொடர்ந்து தை அமாவாசையான நேற்று (ஜன.29) மாலை திருக்கோயில் சாயசரட்சை பூஜை முடிந்ததும் மணி மண்டபத்தில் ஏற்றப்பட்ட தங்க விளக்கிற்கு அர்ச்சனை, ஆரத்தி நடைபெற்றது. பின்னர் சிவாச்சாரியார்கள் தங்க விளக்கினை ஊர்வலமாக நெல்லையப்பர் மூலஸ்தானத்திற்கு எடுத்துச் சென்றனர். அங்கு பூஜைகள் நடத்தப்பட்டு, அதிலிருந்து தீபம் திருவிளக்கின் மூலம் கொண்டுவரப்பட்டு சுவாமி கோயில் தங்க கொடிமரம் முன்பு அமைந்துள்ள விளக்கில் பத்ர தீபம் ஏற்றப்பட்டது.

இதையும் படிங்க:மஹாளய அமாவாசை: காவிரி துலாக்கட்டத்தில் தர்ப்பணம் செய்ய குவிந்த மக்கள்!

பின்னர் சுவாமி கோயில், ஸ்ரீகாந்திமதி அம்பாள் கோயில், ஸ்ரீஆறுமுகநயினார் திருக்கோயில்களில் அமைந்துள்ள உள்சன்னதி மற்றும் வெளிப் பிரகாரங்கள் எனத் திருக்கோயில் வளாகம் முழுவதும் பத்தாயிரம் தீபங்கள் வரிசையாகவும், பல வடிவங்களிலும் ஏற்றி வைத்தனர். இதனால் திருக்கோயில் வளாகமே தீப ஒளியில் ஜொலித்தது.

நெல்லையப்பர் கோயில் பத்ர தீப திருவிழா (ETV Bharat Tamil Nadu)

இந்த திருவிழாவில் நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து பத்ர தீபத்தை ஆட்சியர் ஏற்றி வைத்தார். இரவில் சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் ரிஷப வாகனத்திலும் சுவாமி சண்முகர் தங்க சப்பரத்திலும் 63 நாயன்மார்கள் மரகேடயத்திலும் வீதி உலா நடைபெற்றது. இந்த விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாத்தினார் சிறப்பாகச் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details